×
Saravana Stores

தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை மக்களவை தொகுதியில் வாகை சூடப்போவது யார்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மறுசீரமைப்புக்கு முன்பு வரை கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், சிங்காநல்லூர், பல்லடம் மற்றும் திருப்பூர் சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருந்தது. 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்கு பின், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகளை கொண்டுள்ளது. பொறியியல், வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என எல்லா பொருட்களும் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக மென்பொருள் துறை, கல்வி, மருத்துவத் துறையிலும் கோவை கொடிகட்டிப் பறக்கிறது. அதேசமயம், ஊரகப் பகுதிகளில் விவசாயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கோவை மக்களவை தொகுதிக்கான முதல் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தது. இதுவரை இந்த தொகுதி 17 முறை தேர்தலை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 முறையும், திமுக மற்றும் பாஜ தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரத்து 519 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் 5 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் 27 கேள்விகளை எழுப்பியுள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் 106 பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். அதில் ரேஷன் கடைகள், சமுதாய கூடம், நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மக்கள் எளிதாக அணுகும் நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்து வருகிறார். ஜி.எஸ்.டி வரி குறைப்பு, ரயில்வே திட்டங்களுக்காக நாடாளுமன்றத்தில் இவர் குரல் கொடுத்துள்ளார்.

மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து மருத்துவ உதவிகள், கல்வி கடன் ஆகியவைகளை பெற்று தந்துள்ளார். அந்தவகையில் இந்த முறை கோவை நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜ வேட்பாளர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைமணி உட்பட 37 பேர் களம் கண்டுள்ளனர். முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தற்போது தமிழ்நாட்டில் அனல் பறக்கும் அரசியல் களமாக கோவை மக்களவை தொகுதி பார்க்கப்படுகிறது.

தொகுதி வாக்காளர்கள்
ஆண்கள் 10,41,349
பெண்கள் 10,64,394
3ம் பாலினம் 381
மொத்தம் 21,06,124

2019ம் ஆண்டு தேர்தல் களம்
வேட்பாளர்கள் வாக்கு
எண்ணிக்கை சதவீதம்
பி.ஆர்.நடராஜன் (சி.பி.எம்.) 5,71,150 46%
சி.பி.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.) 3,92,007 31%
ஆர்.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 1,45,104 12%
கல்யாணசுந்தரம் (நாம் தமிழர்) 60,519 5%
நோட்டா 23,190 2%

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்..?
தொகுதிகள் எம்எல்ஏக்கள்
பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக)
சூலூர் வி.பி.கந்தசாமி (அதிமுக)
கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி அருண்குமார் (அதிமுக)
கோவை வடக்கு அம்மன் அர்ஜூனன் (அதிமுக)
கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பா.ஜ.க.)
சிங்காநல்லூர் கே.ஆர்.ஜெயராமன் (அதிமுக)

தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்
ஆண்டு வென்றவர் கட்சி
1952 ராமலிங்க செட்டியார் காங்கிரஸ்
1957 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
1962 ராமகிருஷ்ணன் காங்கிரஸ்
1967 ரமணி சிபிஎம்
1971 பாலதண்டாயுதம் சிபிஐ
1977 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
1980 ராம் மோகன் திமுக
1984 குப்புசுவாமி காங்கிரஸ்
1989 குப்புசுவாமி காங்கிரஸ்
1991 குப்புசுவாமி காங்கிரஸ்
1996 ராமநாதன் திமுக
1998 சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
1999 சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
2004 சுப்பராயன் சிபிஐ
2009 நடராஜன் சிபிஎம்
2014 நாகராஜன் அதிமுக
2019 நடராஜன் சிபிஎம்

* முறியடிக்க முடியாத காங்கிரஸ் சாதனை
1951ம் ஆண்டு கோவை தொகுதி முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பாக ராமலிங்க செட்டியார் களம் கண்டார். ஆனால், எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே, தமிழக வரலாற்றில் போட்டியின்றி நாடாளுமன்றம் சென்ற முதல் வேட்பாளர் என்னும் பெயரைப் பெற்றார். இதுவரை யாரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை.

The post தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை மக்களவை தொகுதியில் வாகை சூடப்போவது யார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Lok Sabha ,Tamil Nadu ,Coimbatore Parliamentary Constituency ,Coimbatore West ,Coimbatore East ,Perur ,Singhanallur ,Palladam ,Tirupur ,Coimbatore South ,Coimbatore North ,Singanallur ,Goundampalayam ,Sullur ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...