×
Saravana Stores

ஓர் ஆண்டில் வருவாய் ரூ.680 தானா? : ஒன்றிய பாஜக அமைச்சரின் பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி : திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள வருமான விபரங்களை சரிபார்க்க, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் பாஜ சார்பில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கடந்த 4ம் தேதி இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இவர் சொத்து விவரங்கள் முழுவதையும் தாக்கல் செய்யாததால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “திருவனந்தபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தன்னுடைய சொத்து விவரங்கள் முழுவதையும் தாக்கல் செய்யவில்லை.

கடந்த 2001-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரி வரம்புக்குள் வந்த வருமானம் ரூ.680 மட்டும் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தவறாகும். ரூ.28 கோடி மட்டுமே தன்னுடைய சொத்து மதிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நடத்திவரும் ஜூபிடர் கேப்பிட்டல் என்ற நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. ராஜீவ் சந்திரசேகருக்கு பெங்களூருவில் ஒரு வீடு உள்ளது. ஆனால் அது குறித்து அவர் மனுவில் தெரிவிக்கவில்லை. எனவே தவறான தகவல் அளித்துள்ள ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே. ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள் உள்ளன. சொந்தமாக விமானமும் வைத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவிக்கிறது. இந்த நிலையில், ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓர் ஆண்டில் வருவாய் ரூ.680 தானா? : ஒன்றிய பாஜக அமைச்சரின் பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Union BJP ,Delhi ,Election Commission of India ,Central Board of Direct Taxes ,Union Minister ,Rajeev Chandrasekhar ,BJP ,Thiruvananthapuram ,Union ,Constituency ,Dinakaran ,
× RELATED புதிதாக பதிவு செய்த கட்சிகளின்...