நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட விழாக்கள் கொண்டாடப்படுவது போல், நேர்த்திக் கடன்களும் மக்களால் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நேர்த்திக் கடன்களில் சில பிற தெய்வங்களுக்கும் கடைபிடிக்கப்பட்டாலும் பிரதானமாக மாரியம்மன் கோயில்களில் வேண்டிக்கொள்கிறார்கள்.
தொட்டில் கட்டுதல்
‘‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்
மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்’’
– என்ற குறளுக்கேற்ப திருமண வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைச் செல்வத்திலிருந்து தான் தொடங்குகிறது. அந்த குழந்தை செல்வம் இல்லாத காரணத்தால் அகில லோக மாதாவான தாயிடம் மழலை செல்வத்தைத் தருமாறு கேட்டு வேண்டிக் கொள்ளும் மக்கள் அநேகம். எந்த வைத்தியராலும் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு, அன்னையின் அருளால் குழந்தைகள் பிறந்திருப்பதை அந்தந்த திருக்கோயில்களில் கட்டப்பட்டிருக்கும் தொட்டில்களே சாட்சி.
குழந்தை வரம் வேண்டி நிற்போர், ஒரு சிறு தொட்டிலை வாங்கி அதை பூக்களால் அலங்கரித்து அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, ‘‘உன்னருளால் நல்ல குழந்தை பிறந்து அதை எங்கள் வீட்டு தொட்டிலில் இட்டு ஆட்டும் பாக்யம் பெற வேண்டும்’’ என்று மனமுருக பிரார்த்தித்துக் கொண்டு, அதைக் கோயிலில் உள்ள வேப்ப மரத்திலோ அல்லது ஸ்தல விருஷத்திலோ கட்டிவிடுவர். அதற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர். சில இடங்களில் கரும்பு தொட்டில் வழக்கத்தில் உள்ளது. சிலர் தொட்டிலுக்குப் பதிலாக, கை வளையல்களையும் தொங்க விடுவர். அவ்வாறு தொங்கவிடும்போது, ‘‘தனது மகளுக்கு / மருமகளுக்கு விரைவில் நல்ல முறையில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்வர். அன்னையின் அருளால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்கும்.
வேப்பிலை ஆடை, மஞ்சள் ஆடை
மாரியம்மன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்துவோர் பெரும்பாலும் அணிவது மஞ்சள் ஆடையைத்தான். மஞ்சளுக்கும் மாரியம்மனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ரேணுகா தேவி தீப்புண்களால் வருந்தியபோது சுற்றியிருந்தவர்கள் மஞ்சளும், வேப்பிலையும் அரைத்து அவள் உடல் முழுவதும் தடவி கொப்புளங்களை குணமாக்கினர். இன்றும் கட்டிகளுக்கு வேப்பிலை மஞ்சள் சாந்து பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ரேணுகாதேவி தீயில் புகுந்தபோது அவள் ஆடைகள் தீயில் கருக, அச்சமயத்தில் அருகில் இருந்த வேப்பமர இலைகளை ஆடையாக அணிந்து கொண்டாள் ரேணுகா தேவி. அது முதல் வேம்பு, மாரியம்மனுக்கு மிகவும் வேண்டப்பட்டதாயிற்று. வேப்பிலை ஆடை கட்டி மாரியம்மன் திருக்கோயிலை வலம் வருவதை இன்றும் பக்தர்கள் வேண்டுதலாக நிறைவேற்றி வருகிறார்கள். பெரியபாளையம் திருக்கோயிலில் இந்த வேண்டுதல் அதிகம் காணப்படுகிறது. மாரியம்மன் வேப்பிலையை ஆடையாக தரிப்பவள். எனவே தான் மாரியம்மனின் பக்தர்கள் தங்களை மாரியம்மனின் பிரதிநிதியாக/ பக்தனாக உருவகித்து அதிக வேம்பு இலைகளுடன் கூடிய வேப்பங்கொத்தை தொடுத்து ஆடைபோல் அணிந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். ஆண்களும் பெண்களும் தங்கள் உடம்பில் வேறு ஆடை எதுவுமின்றி வேப்பிலையால் மட்டுமே தங்களை மூடிக்கொண்டு பிராத்தனை செய்வர்.
முடியிறக்குதல்
எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் செய்வதுபோல் மாரியம்மனுக்கும் முடியிறக்குதலை வேண்டுதலாகச் செய்து வருகின்றனர். சிலர் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் முதல் முடியை அம்மனுக்கு காணிக்கையாக்குவர். இது அவர்கள் குல வழக்கமாகும். குழந்தையில்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்ததும் முதல் முடியை அம்மனுக்குக் கொடுப்பதாக வேண்டிக்கொள்வர். உடல் நோயினால் துன்பப்படுகிறவர்களும் இவ்வாறு வேண்டிக்கொண்டு தங்கள் முடியைக் காணிக்கையாக்குவர். தாங்கள் வேண்டியது நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, விரதமிருந்து கோயிலுக்கு வந்து முடியிறக்கிக் கொள்வதும் உண்டு.
கண் மலர் செலுத்துதல்
மனிதனின் எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானமென்பர். அந்த சிரசில் உள்ள முக்கிய உறுப்பு கண்ணாகும். கண்ணில்லாமல் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கும். கண் பார்வை குறைவு உள்ளவர்களும், கண் பார்வையிழந்தவர்களும் தாங்கள் மீண்டும் கண் பார்வை பெறும் பொருட்டு அன்னைக்கு கண் மலர் சாத்துவதாக வேண்டிக் கொள்வர். தங்கம், வெள்ளி மற்றும் மற்ற உலோகங்களாலான கண்மலர்களை வாங்கி அம்பிகையின் பாதத்தில் வைத்து வழிபட்டு பின்னர் அம்பிகையின் கண் இருக்கும் இடத்தில் வைப்பர்.
இதேபோல் உடலின் மற்ற உறுப்புக்களில் கோளாறு இருந்தால், எந்த உறுப்பு கோளாறு உள்ளதோ அந்த உறுப்பின் வடிவத்தைச் செய்து அன்னையின் திருப்பாதங்களில் வைத்து பிரார்த்தித்து உண்டியில் செலுத்தி விடுவர். இதனால் அந்தந்த உறுப்புகள் சீராகுமென்ற நம்பிக்கையில் பக்தர்கள் அன்னைக்கு இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
ஆடு, மாடு, கோழி விடுதல்
அதிக பிணியினால் துயருரும் மக்கள், தாங்கள் அந்த பிணியிலிருந்து விடுபட வேண்டி அம்பிகைக்கு ஆடு, மாடு, கோழி, இவைகளை விடுவதாக வேண்டிக்கொண்டு, தங்கள் பிராத்தனையை நிறைவேற்றுவர். இவ்வாறு அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி போன்றவைகள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடும். அவைகளையும் அம்பிகையின் அம்சமாகவே கருதுவர். அவற்றிற்கு எவரும் துன்பம் தரமாட்டார்கள்.
மற்ற வேண்டுதல்கள்
பயிர் செழிக்க வேண்டி, அப்பயிரின் சிறு பகுதியை பறித்து வந்து கோயிலில் கட்டி தொங்க விடுவர். உதாரணமாக நெல்பயிர் நன்கு விளைந்து மகசூல் அதிகம் வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டு சிறிது நெற் கதிர்களை அறுத்து வந்து அதனை கோயிலில் கட்டி தொங்கவிடுவர்.நோய் தீர வேண்டி அல்லது குறித்த செயல் நல்ல முறையில் நடைபெறும் வேண்டி (வேலை கிடைக்க, திருமணம் நடக்க, அலுவலக மாறுதல் நடக்க, வீடு வாங்க போன்றவை) அம்மனுக்கு புடவை சார்த்துதல், அபிஷேகங்கள் செய்தல், திருக்கோயிலுக்குத் தேவையான பாத்திரங்கள் கொடுத்தல், விளக்குகள் கொடுத்தல், அன்னதானம் செய்தல் போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
தொகுப்பு: அருள் ஜோதி
The post மாரியம்மனுக்கான நேர்த்திக் கடன்கள் appeared first on Dinakaran.