பட்டதாரி வாலிபன் ஒருவன் நல்லதொரு வேலை தேடி செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களை அலசிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு விளம்பரம் அவனது கவனத்தைக் கவர்ந்தது. ‘‘உடனடி தேவை’’ என்றதொரு தலைப்பில், நான்கு குழந்தைகளுக்கு தாய் ஒருவர் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதாகவும், அவளது சிறுநீரகங்கள் பழுதானதாகவும், பிரச்னைகள் விளக்கப்பட்டிருந்தது. மேலும், ‘‘இந்த தாய்க்கு சிறுநீரக தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்’’ என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது. இதனை படித்த பட்டதாரி வாலிபனால் அந்த அறிவிப்பை கடந்து செல்ல முடியவில்லை. உடனடியாக ரெயில் டிக்கெட் எடுத்து, மறுநாளே டெல்லிக்கு புறப்பட்டான்.
மருத்துவமனையை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரியப்படுத்தினான். இவனது தியாக உள்ளத்தைப் பாராட்டிய மருத்துவர்கள், இவன் தனது ஒரு சிறுநீரகத்தை இழப்பதால் உண்டாகும் விளைவுகளையும், அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் வேதனைகளையும் விவரித்தனர். அந்த வாலிபன் உறுதியுடன், ‘‘இதற்காகவே நான் வந்தேன்’’ என்று கூறி கையொப்பமிட்டான். முடிவில் இவனுடைய சிறுநீரகம், அவன் முன்பின் பார்க்காத ஒரு 40 வயது ஏழைப் பெண்ணின் சரீரத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இதனால் ஏழைத்தாய் பிழைத்தாள். உடனே ஏழைத்தாயின் கணவர், தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபனுக்கு தன்னால் இயன்ற சன்மானங்களை வழங்க முயற்சித்தார். வாலிபனோ, புன்னகையுடன் அதை மறுத்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டான். பட்டதாரி வாலிபன் தன் சொந்த ரத்தத்தை சிந்தி, தன் ஜீவனுக்கொத்த சிறுநீரகத்தைக் கொடுத்ததால், அந்த ஏழைத்தாய் பிழைத்தாள். இல்லையேல் பரிதாபமாக மரித்திருப்பாள். இறைமக்களே, இதைப் போலத்தான் நம்மில் எவ்வித நற்கிரியைகளும் இல்லாதிருந்தும், நாம் அடைய வேண்டிய பெரும் தண்டனையை இயேசுகிறிஸ்து தன் மீது ஏற்றுக் கொண்டு, சிலுவை மரணத்திற்கு சிரம் பணிந்தார். சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.
நாம் நீதிமான்களாக மாறுவதற்கு அவர் பாவங்களைச் சுமந்தார்.
நாம் ஆரோக்கியம் உள்ளவர்களாக மாறுவதற்கு அவர் காயங்களைச் சுமந்தார்.
நாம் செல்வந்தர்களாக மாறுவதற்கு அவர் தரித்திரத்தைச் சுமந்தார்.
நாம் கிரமமாக மாறுவதற்கு அவர்
அக்கிரமங்களைச் சுமந்தார்.
நாம் சுதந்திரவாளியாக மாறுவதற்கு அவர் சாபங்களைச் சுமந்தார்.
‘‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்’’ (ரோமர் 5:8) என்று இறைவேதம் பிரகடனம் செய்கிறது. அவர் மானிடரின் மீட்பிற்காக மரித்தது மட்டுமல்லாது, மானிடரின் வாழ்க்கையில் நம்பிக்கை தீபமேற்ற மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இவ்வாறு அவர் வெற்றிக்கொடி ஏற்றியதால் அவருடைய அடியார்களையும் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்க இன்றளவும் துணைசெய்கிறார்.
தொகுப்பு: அருள்முனைவர். பெவிஸ்டன்.
The post புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள் appeared first on Dinakaran.