- கிருஷ்ணகிரி
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- கலெக்டர்
- சாராயு
- கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி பொதுத் தேர்தல்
- கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி
- தின மலர்
*கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்கு சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறும் பணிகள், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிருஷ்ணகிரி- மகாராஜகடை செல்லும் சாலையில், பறக்கும் படையினரின் வாகன தணிக்கையை, பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து கலெக்டர் சரயு கூறியதாவது:
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் வாக்குகளை விருப்பத்தின் பெயரில், தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 14,787 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, 1,603 வாக்காளர்கள் விருப்பத்தின் பேரில், படிவம் 12டி பெற்றுக்கொண்டனர்.
முதல் நாளில் 772 வாக்காளர்கள், தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். 14,440 பேர் மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டு, 640 வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில், தபால் வாக்கிற்கான படிவம் 12 டி பெற்றுக்கொண்டனர். அவர்களில் முதல் நாளில் 367 ேபர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்குச்சாவடி அலுவலர்கள், அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, வாக்குகளை பெற்று வருகின்றனர். இந்த தபால் வாக்குகளை பெறுவதற்காக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, மொத்தம் 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 8,14,076 பேரும், பெண் வாக்காளர்கள் 8,08,798 பேரும், இதர வாக்காளர்கள் 305 பேரும் என மொத்தம் 16,23,179 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 40 சதவிகித பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சரயு கூறினார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட மோகன்ராவ் காலனி 1வது குறுக்கு தெருவில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகளையும், சேலம் ரோடு பாகம் 158ல், 96 வயதுடைய காமாட்சி செட்டியார் என்பவரிடம், படிவம் 12டி மூலம் தபால் வாக்கு செலுத்தும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி- மகாராஜகடை ரோடு, ஆத்துகால்வாய் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமேலுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில், அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு ஆய்வு மேற்கொண்டார்.
The post கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.