×
Saravana Stores

சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனையுடன் அனுமதி: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சென்னை பாண்டி பஜாரில் நடத்தும் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிறகு பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பாண்டி பஜார் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாலை 6.30 மணிக்கு ‘ரோட் ஷோ’ மூலம் பொது மக்களிடம் வாக்குகளை சேகரிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்து வருகிறது.இந்த ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு போலீசில் பாஜக நிர்வாகிகள் கடிதம் அளித்தனர். அதை ஏற்று சென்னை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

அதேநேரத்தில் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் கோஷங்கள் எழுப்பக்கூடாது, ரோடு ஷோவில் உரையாற்ற அனுமதி இல்லை, மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் யாரும் பேசக் கூடாது, ரோடு ஷோவில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது. எந்தவித பதாகைகளும் ஏந்திச் செல்லக்கூடாது, அனுமதிக்கப்பட்ட சாலைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டால் அனுமதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும், மோடி பிரதமர் என்பதால் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் உள்ளே வராதபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. பாஜ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்வதால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதையும் மாநகர போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். ரோட் ஷோ நிகழ்ச்சியால் இன்று பிற்பகல் முதல் நிகழ்ச்சி முடியும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டுள்ளதால், அங்கு மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்துள்ளார். அவர் நாமக்கல்லில் ரோடு ஷோ நடத்தினார். அதைத் தொடர்ந்து, திருவாரூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் தென்காசியில் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அவரைப் போல மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா காசிமேட்டில் நேற்று காலை பிரசாரம் செய்தார். பின்னர் 1.30 மணிக்கு கோவளம் பகுதியில் தென் சென்னை வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதேபோல அனுராக் சிங் தாக்கூரும் ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கம் நடத்தும் கூட்டத்தில் கலந்த கொண்டு பேசினார். பின்னர் மாலை 4 மணிக்கு ஆவடியில் வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தமிழகத்தில் பாஜபலவீனமாக இருப்பதால் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேர் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகிற 13, 14ம் தேதிகளில் தமிழகம் அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த தமிழக பாஜநிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

* மாலை 6.30 மணிக்கு ஷோ ஆரம்பம்
பிரதமர் மோடியின் இன்றைய சுற்றுப்பயண விவரம்: பிரதமர் மோடி இன்று காலை 11.15க்கு உ.பி. மாநிலம் பிலிபிட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து சென்று, மத்திய பிரதேசம் பாலாகாட்டில் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். மாலை 6.30க்கு பாண்டி பஜார் ரோடு ஷோவில் கலந்துகொள்கிறார். இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார். அடுத்த நாள் புதன்கிழமை காலை 10.30க்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகிறார். பிற்பகல் 1.45க்கு நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மகாராஷ்டிரா சென்று ராம்டெக்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

The post சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனையுடன் அனுமதி: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Pandi Bazaar ,Bandi Bazaar ,BJP ,Chennai Pandi Bazaar ,
× RELATED ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு