தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் ஆ.மணியை ஆதரித்து அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக தமிழக அரசு உள்ளது. 1989ம் ஆண்டு வன்னியர் உள்ளிட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 பேருக்கு தமிழக முதல்வர் தற்போது மணி மண்டபம் கட்டி வருகிறார். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் பாமக என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார். ஆனால் பாஜவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்?. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பாமக கூறி வருகிறது.
ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று கூறும் பாஜவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக அரசை விமர்சனம் செய்கிறார். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் அதிமுக ஆட்சியில் வன்னியர்களை ஏமாற்ற 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அவசர அவசரமாக கொடுத்து உங்களை ஏமாற்ற பார்த்தார்கள். அதனை நீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி திமுக அரசு ஒரு குழு அமைத்து போராடி வருகிறது. விரைவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்க சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்று வழங்குவோம்.
பாஜ ஆளும் 6 மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு விட்டது. தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இன்னும் கட்டப்படாமல் உள்ளது. அதற்காக நிதியும் ஒதுக்கவில்லை. 8 ஆண்டுகளாகியும் ஏன் கட்டவில்லை என கேள்வி கேட்டால், ஒன்றிய அரசுதான் பதில் கூற வேண்டும். ஆனால், பழனிசாமிக்கு கோபம் வருகிறது. பாஜவுடன், அதிமுக தகாத உறவு வைத்துள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தின் நலனில் அக்கறையில்லை. பிரதமருக்கு நான் வைத்த பெயர் 29 பைசா. அந்த பைசா செல்லுபடியாகாது. நீங்களும் பிரதமரை பார்த்து 29 பைசா என அழையுங்கள். ஜிஎஸ்டி வரி வசூலில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 29 பைசா தான் திருப்பி கொடுக்கிறார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
* ‘மோடியும், எடப்பாடியும் அமைதிப்படை அமாவாசைகள்’
சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர்னு எடப்பாடி கேட்கிறார். நாங்கதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டோமே. யார் பிரதமர் என்பது முக்கியமல்ல. யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம்னு. சரி, நீங்க பாஜவை எதிர்த்து களம் இறங்கியிருப்பதாக கூறியிருக்கீங்க. உங்க அதிமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளருனு எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்கிறீர்கள். ஆனா உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே… எடப்பாடி பழனிசாமி, இந்த படத்தில் (மோடியிடம் எடப்பாடி பல்லை காட்டி சிரிக்கிறார்) என்னத்த காட்டுகிறார் பாருங்கள். டூத் பேஸ்ட் விளம்பரம் மாரிதி இல்ல. சிரிக்கிறது தப்பு இல்ல. நான் உருவ கேலி எல்லாம் செய்யல. அவருக்கு சிரிச்ச முகம் தான். அமைதிப்படை படம் வந்துச்சு ஞாபகம் இருக்கா.. அதுல ஒரு பாத்திரம் வரும் ஞாபகம் உள்ளதா?. இந்தா இருக்கு அந்த 2 அமாவாசைகள். எவ்வளவு அழகா சிரிக்கிறார் பாருங்க. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக்கொடுத்துட்டு சிரிச்சா பரவாயில்லை. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
* தலைவருக்கே சைக்கிள் இல்லையா? தொழிலாளியிடம் பிடுங்கிய தமாகாவினர்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பாஜ கூட்டணியில் தமாகா வேட்பாளராக போட்டியிடும் விஜயகுமாரை ஆதரித்து நேற்று மாலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். வேட்பாளர்காக ஒரு சைக்கிள் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.கே.வாசன் மற்றும் விடியல் சேகர் ஆகியோர் ஓட்டுவதற்கு என சைக்கிள் கிடைக்கவில்லை. இதனால் தடுமாறிய கட்சி நிர்வாகிகள் அங்கு, சாலையில் சைக்கிளில் வந்த பீகாரை சேர்ந்த வடமாநில பெயிண்டிங் தொழிலாளி சதீஷை மறித்தனர். பின்னர், அவரது கழுத்தில் கட்சி துண்டை அணிவித்து ‘இதர் ஆவோ ஜீ, ஏ சைக்கிள் தியோஜீ’ என்று இந்தியில் பேசி ‘சிறிது நேரத்திற்கு மட்டும் சைக்கிள் வேண்டும் என்று கூறி வாசனுக்காக சைக்கிளை தயார்படுத்தினர். அப்போது பத்திரிகை போட்டோகிராபர்கள் அந்த சைக்கிளை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு தான் அந்த சைக்கிளில் பெல், பெடல், பிரேக் என எதுவும் இல்லாததை கவனித்த நிர்வாகிகள் பதறிபோய் வடமாநில வாலிபரிடமே சைக்கிளை ஒப்படைத்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஜி.கே.வாசனுக்காக கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் இருந்து சைக்கிள் கொண்டுவரப்பட்டு பின்னர் ஜி.கே.வாசன் சைக்கிளில் பிரசாரம் செய்தார்.
*குச்சி ஐஸ்சும்… ஜி.கே.வாசனும்…
கரூர் மாவட்டம் தென்னிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு தொண்டர் வாசனுக்கும் மற்றும் வேட்பாளருக்கும் குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கி சப்பிக்கொண்டே வாசன் ஓட்டு சேகரித்தார். அதோடு பின்னணியில் ஒருவர், தற்போது வெயில் அதிகமா இருப்பதால், ஐயா.. அவர்கள், ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே ஓட்டு சேகரிக்க வேண்டும் என தொண்டர் ஒருவர் பிரியப்பட்டு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார் என மைக்கில் கூவுகிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* ரூ.1 கோடி ஆட்டைய போட்ட ஈரோடு அதிமுக வேட்பாளர்: வீடியோ வைரல்
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு எதிராக தாய்மாமனான ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ செல்வராஜ் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் செல்வராஜ் கூறியிருப்பதாவது: ஆற்றல் அசோக்குமார் எனது அக்கா மகன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சொத்து பிரச்னை ஒன்றில் ஜீவனாம்சம் வாங்கிக் கொடுப்பதாக கூறி ரூ.1 கோடி அனைவர் முன்னிலையில் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை 3 மாதங்களாக கொடுக்கவில்லை.இதேபோல, அவரது சொந்த தம்பியிடம் பத்திரத்தை அடமானமாக வைத்து போலி கையெழுத்து போட்டு பணம் வாங்கினார். இதேபோல, பலரிடம் ஏமாற்றி உள்ளார். உறவினர்களிடமே ஏமாற்றிய அசோக்குமாருக்கு மக்கள் யாரும் ஓட்டு போடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தரப்பில் கூறுகையில்,‘‘குடும்ப பிரச்னையை வைத்து திட்டமிட்டு பொய்யான தகவல்களை கூறி தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக குறிப்பிட்ட சிலர் சதி செய்கின்றனர்’’ என்றனர்.
* தேர்தலுக்காக பாஜ நடத்தும் நாடகம் கச்சத்தீவு பிரச்னை: எடப்பாடி பொளீர்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு இடையே தான் போட்டி, மற்றொரு கட்சி பெயரளவில் போட்டியிடுகிறது. ராமநாதபுரத்தில் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் ரூ.14,000 கோடி மதிப்பில் காவிரி – குண்டாறு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை. கச்சத்தீவு பிரச்னையால் தமிழக மீனவர்கள் உரிமையை இழந்துள்ளனர். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கு சொந்தமானது. இந்தியாவுடன் கச்சத்தீவை இணைப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா குரல் எழுப்பினார். 2008ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2011ல் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம், வருவாய்த்துறையை அந்த வழக்கில் இணைத்தார். 2014ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பத்து ஆண்டுகளாக அமைதியாக இருந்த பாஜ, தேர்தலுக்காக தற்போது கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என நாடகமாடி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
* ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பற்றி வாய் திறக்கல…
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் பிரசாரங்களுக்கு செல்லும்போது எடப்பாடியை மட்டும் குறிவைத்து தாக்கி பேசி வருகிறார். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒரு வார்த்தை கூட எடப்பாடி பேசவில்லை.
* ஜெயபாலா… ஜெயபெருமாளா…?
பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வேட்பாளர் ஜெயபெருமாளை ஜெயபால் என்று பிழையாக வாசித்தார். உடனே சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டதால் இடையிடையே டென்ஷன் ஆனார்.
The post சட்ட போராட்டம் நடத்தி வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை வாங்கி கொடுப்போம்: தர்மபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.