×

புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம் வரும் ‘மர்டர் மணிகண்டன்’ மனைவி பாஜவில் ஐக்கியம் : கட்சியில் சேர்க்க பேரணி நடத்தி ராஜ மரியாதை செய்த எம்எல்ஏக்கள்

சென்னை: புதுச்சேரியில் பிரபல தாதா மனைவியை பாஜவில் சேர்க்க 4 எம்எல்ஏக்கள் பேரணி நடத்திய சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் அரசியல் கட்சிகளில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே காரைக்காலைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி, பாஜவில் இணைந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தாதா மணிகண்டன். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை ‘மர்டர் மணிகண்டன்’ என்று அழைப்பார்களாம்.

இவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக 20 வருடங்களுக்கு மேலாக காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்தபடி செல்போன்மூலம் தனது ஆதரவாளர்களை இயக்கி சில தாதாக்கள் மூலம் பல்வேறு குற்றங்களில் மணிகண்டன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில், பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்களான கல்யாண சுந்தரம், ராமலிங்கம் மற்றும் பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன், அங்ளான் ஆகியோர் தாதா மணிகண்டனின் இரண்டாவது மனைவி பத்மாவதியை தங்களது கட்சியில் இணைக்க மேலிடத்தில் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர்.

மேலிடம் சிக்னலை தொடர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரி ரோடியர் மில் மைதானத்தில் இருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படைசூழ மணிகண்டனின் மனைவியை பேரணியாக இசிஆரில் உள்ள ஒரு மண்டபத்துக்கு எம்எல்ஏக்கள் அழைத்து வந்தனர். பின்னர் 4 எம்எல்ஏக்களும் தனித்தனியாக சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் கட்சியில் இணைத்துக் கொண்டனர். ஒரு கட்சியில் புதிய உறுப்பினர் இணைய வேண்டுமென்றால் அக்கட்சியின் தலைவர், அமைச்சர்கள் முன்னிலையில்தான் நிகழ்வுகள் பெரும்பாலும் நடக்கும்.

ஆனால் 4 எம்எல்ஏக்கள் தாதா மனைவியை ஆதரவாளர்களுடன் அழைத்து வந்து பாஜகவில் இணைத்துக் கொண்ட சம்பவம் புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் பின்னணியில் உள்ளவர், ஊழல் செய்பவர்கள் என அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வாஷிங்மெஷினான பாஜவில் இணைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது கொலை வழக்கில் சிக்கி உள்ள பிரபல தாதாவின் 2வது மனைவியை 4 பாஜ எம்எல்ஏக்கள் ராஜ மரியாதை செய்து கட்சியில் இணைத்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம் வரும் ‘மர்டர் மணிகண்டன்’ மனைவி பாஜவில் ஐக்கியம் : கட்சியில் சேர்க்க பேரணி நடத்தி ராஜ மரியாதை செய்த எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Tags : Murder Manikandan ,Puducherry ,BJP ,CHENNAI ,Karaikal ,Manikandan ,Dinakaran ,
× RELATED ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ்...