×

தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல் செய்தவர்கள் பாஜவினர்: கமல்ஹாசன் தாக்கு

தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரியிலும் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையிலும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நமது யுகம் பழிக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும். வருமான வரித்துறையை ஏவி நம்மை அவர்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள். அது பலிக்காது. நம்முடைய உழைப்பில் இருந்து ஜிஎஸ்டியாக ஒரு ரூபாய் வாங்கி கொண்டு அவர்கள் தருவதோ 29 பைசாதான். இது நல்ல அரசியல் அல்ல. இந்தியாவில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள்.

உங்களை போன்று நானும் வரவேற்கிறேன். ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து 68 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டி உள்ளார்கள். ஆனால் மாநில அரசு செய்யும் பணிகளுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியை அளிக்கவில்லை. உதாரணமாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தருகிறேன் என்று கூறிய நிதியை அவர்கள் வழங்கவில்லை. முழுக்க முழுக்க மாநில அரசு அதனை செய்து வருகிறது. ஒரு அரசு சரியான பாதையில் நாட்டை வழி நடத்திட வேண்டும். ஆயிரம் கோடியை ஒருவருக்கே கொடுக்கிற அரசு எங்கே.. மாதம் மாதம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு எங்கே.. சிந்தியுங்கள். இலவச பேருந்து பயணம்… மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் இருக்காது. பணக்கார திட்டங்கள் தான் இருக்கும். அண்ணா சொன்னார் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று.. ஆனால் மோடி பணக்காரன் சிரிப்பில் ஏழை காணலாம் என்று செய்கிறார்.

ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் ஈட்டுகிறது. ஆனால் 300 கோடி எப்படி அந்த நிறுவனத்தால் தர முடியும். தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல் செய்துள்ளார்கள். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை அம்பேத்கர் எழுதியுள்ளார். அதை கிழித்தும் அளித்தும் செயல்படுகிறார்கள். அதை நாம் மீட்க வேண்டும். நாளை நமதே.. கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பே.சுரேஷ், மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் திமுகவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல் செய்தவர்கள் பாஜவினர்: கமல்ஹாசன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,BJP ,Thandaiyarpet ,West Chennai constituency ,DMK ,Kalanithi Veerasamy ,Makkal Neeti Maiya ,Kamal Haasan Udayasuriyan ,Otteri ,Thiruvik Nagar constituency ,Vannarpettai MC Road ,Rayapuram constituency ,Kamal Haasan Thakku ,
× RELATED கெட்ட வார்த்தை கடுப்பான KAMAL! | Kamal Haasan, Shankar, Siddharth Speech at Indian 2 Press Meet