×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முதல்வரை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தன. அந்த வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வரும் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் பேரவையின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதகத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி. மணி, மாநிலத் தலைவர்கள் என்.டி. மோகன், ஆதி குருசாமி, வில்லியம்ஸ், ஜெயபால், கொரட்டூர் ராமச்சந்திரன், டீக்கடை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தரம், மருந்து வணிக சங்க பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டமைக்காக நன்றி தெரிவித்ததுடன், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முதல்வரை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Council of Merchants Associations ,Chief Minister ,India Alliance ,Parliamentary ,CHENNAI ,Council of Tamil Nadu Merchants' Associations ,M.K.Stalin ,Parliamentary Lok Sabha elections ,Tamil Nadu Chamber of Commerce Associations ,Dinakaran ,
× RELATED மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது...