×
Saravana Stores

அவன் தம்பி

வானவில்லைப் பார்த்தபடி சரயு நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. கரையோரத்தில் இலக்குவனும் ஊர்மிளையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.“ஊர்மிளா! பதினான்கு வருடங்கள் நான் காட்டில் இருந்தேன். நான் தூங்காமலிருந்து என் அண்ணனைக் காக்க வேண்டும் என்பதற்காக, என்னுடைய தூக்கத்தை நீ வாங்கிக் கொண்டாய். எனது தூக்கத்தை பகல் பொழுதில் தூங்கியும், உனது தூக்கத்தை இரவில் தூங்கியும் நீ கழித்தாய்! தொடர்ந்து அத்தனைக் காலம், எனக்காக நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறாயே.. இது எவ்வளவு பெரிய செயல்! நான் எப்பொழுதும் இந்த உன் செயலை நினைத்துக் கொண்டே இருப்பேன்.”

“இருக்கட்டும் இது என் பொறுப்பு. அதைத்தானே நான் செய்தேன். இது என் கடமை அல்லவா?” என்றாள் ஊர்மிளா. “இது பொறுப்பு, கடமை ஒட்டிய செயல் என்பதைவிட நீ என் மேல் கொண்ட காதல்தான் காரணம் என்பதை நான் அறிவேன். எனக்காக நீ எதையும் செய்யும் அந்தக் குணம் யாருக்கும் வராது. இதை எண்ணும் போதெல்லாம் எனக்கு நன்றியும்
மகிழ்ச்சியும் ஒருங்கே வருகிறது. அதோ அந்த வானவில்லை போலத்தான், நீ என் வாழ்வில் வந்திருக்கிறாய்!”

“ஆஹா… இன்று என்ன என் தலைவனுக்கு காதலும் கவிதையும் பொங்கிப் பொங்கி வருகிறது! எந்தப் பெண்ணையும் ஒரு ஆண் மரியாதையாய், மதிப்பாய் நடத்தும் போது அவனுக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். அதுதான் என்னைப் பொறுத்த வரையில் உண்மையான காதல். சரி, இருக்கட்டும். நம் பிள்ளைக்கு எதற்காக அங்கதன் என்று பெயர் வைத்தீர்கள். காரணம் சொல்கிறேன் என்றீர்களே. இன்று சொல்லுங்கள்..” “சொல்கிறேன். வாலியின் இறுதி கட்டத்தில் இருந்துதான், இதை நான் சொல்லத் துவங்கப் போகிறேன். கவனமாகக் கேட்டுக் கொள்.”

“ராம’ எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த அம்பை வாலி பார்த்தபடியிருந்தான். அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது. இராமன் வாலியின் அருகில் வந்தான். “உன் தவறான செயல்களுக்கான தண்டனை, உனக்கு அளிக்கப்பட்டது. தண்டனை அளிப்பவன் நேரில் வந்து அளித்தால் என்ன? உன் கண் காணாத இடத்தில் இருந்து அம்பு எய்தால் என்ன ?”
“ராமா! எனக்கு, இறக்கும் தருணத்தில் ஞானம் அளித்து விட்டாய். நீ எது செய்தாலும் எனக்கு அது நன்மைதானே இராமா! எனக்கு நீ ஒரு வரம் அளிக்க வேண்டும். சுக்ரீவன் ஏதாவது தவறு இழைத்தால் கூட அவனை விட்டு விலகி விடாமல் அவனை உன்னுடன் என்றும் சேர்த்து வைத்துக் கொண்டு காத்தருள வேண்டும். எனக்கு இன்னும் ஒரு கடமை இருக்கிறது. என் மகன் அங்கதனை இங்கே அழைத்து வரச் செய்யுங்கள்.”

அங்கிருந்த வானரங்கள் ஓடிச் சென்றன. அங்கதனைக் கண்டன. “இளவரசே! நம் அரசர் வாலி அம்பு எய்தப்பட்டு இறக்கும் தருணத்தில் இருக்கிறார்.”
“என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று வினவியபடி அங்கதன் விரைந்துஓடி வந்தான். “எங்கே? எங்கே?” பதறினான். வானரங்கள் சுட்டிக்காட்டிய இடத்தை அடைந்தான். ஒரு ஆலமரத்தின் அடியில் வாலி, மார்பில் ஒரு அம்பு தைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தான். அங்கதன் தன் தந்தை முன் மண்டியிட்டு அமர்ந்தான். கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டான்.

தந்தையின் உடலில் வேறு எங்கும் ஒரு சிறு காயமோ கீறலோ இல்லை என்பதை உணர்ந்தான். ஆனால் தந்தையின் மார்பில் குத்தியிருந்த அம்பையும் அந்த அம்பில் பொறிக்கப்பட்டிருந்த ‘ராம’ என்ற எழுத்துகளில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்தான்.. அதிர்ந்தான்.சுற்றி இருந்த கூட்டத்தினரை அங்கதன் உற்று நோக்கினான்.அனுமன், சுக்ரீவன், மற்ற வானரங்கள், அவர்களைத் தாண்டி நின்று கொண்டிருந்த இராமனையும் என்னையும் கண்டு கைகூப்பினான்..என்ன நடந்திருக்கக்கூடும் என்று யோசிக்கும் முன்பே , வாலி அங்கதனை அருகில் இன்னும் இழுத்து அணைத்துக் கொண்டான். இராமனை நோக்கி “இனி அங்கதன் உங்கள் பொறுப்பு” என்று குரல் தழுதழுக்கக் கூறினான்.

இராமன் உடனடியாக வாலியின் அருகில் வந்து குனிந்து அங்கதன் கைகளைப் பற்றினான். வாலி இராமனின் கைகளையும் அங்கதன் கைகளையும் ஒன்று சேர வைத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டான். அங்கதனைப் பார்த்து “இனி இந்த கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன்தான். நீ அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவனுக்கு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். உன் தாய் தாரையிடம் என் வாழ்த்துக்களைச் சொல்.

சுக்ரீவனைப் பார்த்து “இனி எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இராமனின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நீ நடக்க வேண்டும். அனுமன் என்றும் உங்களுக்கு துணை நிற்பான்.”“எனக்கும், அங்கு இருந்த எல்லோருக்கும் வருத்தம் மேலோங்கி இருந்தது. இராமன் வாலியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தான். காலில் விழுந்து வணங்கிய அங்கதனைத் தொட்டுத் தூக்கினான். தன் இடுப்பில் இருந்த உடைவாளை எடுத்து அங்கதன் கையில் கொடுத்தான். அவனை ஆலிங்கனம் செய்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வாலிக்கு ஆனந்த கண்ணீர் பெருகியது. வாலி, இராமனை, அங்கதனை, உடைவாளைப் பார்த்தபடி தன் இறுதி மூச்சை விடுத்தான். அவன் உயிர் பிரிந்தது.”

“அங்கதன் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். அவனுக்கு இராமன் மேல் இருந்த பக்தி ஒன்றுதான் பலமாக இருந்தது. மழைக்காலம் வந்தது. சில மாதங்கள் கழிந்தன. இராமன் சுக்ரீவனின் படைக்காகக் காத்திருந்தது, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுக்ரீவன் இருந்தது, அனுமன், என்னுடன் சேர்ந்து சுக்ரீவனை இராமன் முன் அழைத்து வந்தது எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாய் நடந்தது.”

“சுக்ரீவன் தலைமையில் அனுமன், அங்கதன், ஜாம்பவான், மற்றும் வானரப் படைகள் எல்லாமும் சீதையைத் தேடி நாலாப் பக்கமும் சென்றது, சீதை இலங்கையில் இருப்பதை கண்டறிந்ததது, அனுமன் சீதையை அசோகவனத்தில் சந்தித்தது, பின் இராமனிடம் ‘கண்டேன் சீதையை’ என்று கூறியது, வானரப்படைகள் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றது வரை நடந்தேறியது,” “ராமனும் நானும் இலங்கைக்குச் செல்ல முடிவெடுத்தபொழுது, அனுமன் தோள்களில் இராமனும், அங்கதன் தோள்களில் நானுமாக வந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம். அப்பொழுது நான் அங்கதனின் மனநிலையை எண்ணிப் பார்த்தேன் அவனைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் அவனுக்கு எதிரியாகத்தான் பட்டிருக்க வேண்டும்.”

“அங்கதனுக்கு தன் தந்தை இறப்பிற்குக் காரணமாக இருந்த தன்னுடைய சிற்றப்பா சுக்ரீவன், அவனுடைய அரசின் இளவரசனாக இருக்கவேண்டிய நிலை ஒரு புறம், தன் தந்தையின் இறப்பிற்கு காரண கர்த்தாவாகச் செயல்பட்ட அனுமனை சகோதரனாகப் பாவிக்கின்ற நிலை மற்றொருபுறம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் காரணமாக இருந்த இராமபிரானுக்காக இப்பொழுது இலங்கைக்குச் செல்ல வேண்டிய நிலை.

இவை எல்லாவற்றிலும் தன்னுடைய தனிப்பட்ட துக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இராமன் என்ற ஒருவனுக்காக அவன் கடைப்பிடித்த நேர்மை, சத்தியம், உண்மை, முழுமையாக தன்னை எல்லா செயல்களிலும் ஈடுபடுத்திக் கொண்ட தன்மை, அவன் ஒருவனுக்கே சாத்தியமாக இருந்தது. தன் தந்தை வாலி சொன்ன வாக்கிற்காக அத்தனையையும் முழு மனதுடன் ஈடுபட்டு செய்து வந்தான்.” “வானரப் படைகள் சேது பாலம் கட்டி கடலைக் கடந்து இலங்கை வந்து சேர்ந்ததது. சுக்ரீவன், அங்கதன், அனுமன், ஜாம்பவான், விபீஷணன் மற்றும் படைகள் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தின் நடுநாயகமாக இராமன் நின்றிருந்தான். அவன் அருகில் நானும் நின்றிருந்தேன்.” அப்போது ராமன், “நமது வானரப் படைகள் சற்று முன் இலங்கையைச் சுற்றி வந்தன. இதை உப்பரிகையிலிருந்து பார்த்த இராவணன் கண்டும் காணாதது போல் உள்ளே சென்று விட்டான்.

இராவணனிடமிருந்து எந்த ஒரு அறிகுறியும் நமக்கு தென்படவில்லை. ஆகவே, இராவணனுடன் போர் செய்வதை தவிர வேறு வழியில்லை. இருப்பினும் நாம் போரின் தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள். அறம் வழி நடப்பவர்கள். நாம் ஒரு தூதுவனை அனுப்பி, நம்முடைய எண்ணத்தைத் தெரியப்படுத்தலாம். ஒன்று நம்முடைய தேவியை விடுவித்து விட்டு நம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் போரில் அவன் உயிர் விடத் தயாராக வேண்டும்.” என்றான். இராமனின் இந்தக் கருத்தை விபீஷணன் வரவேற்றான்.” “அப்படியே செய்யலாம் என்றான். அருகில் இருந்த சுக்ரீவனும் ஒரு அரசர் இப்படித்தான் செய்ய வேண்டும். ஒரு தூதுவனை அனுப்புவது தான் தர்மம் என்று கூறினான்.”

“எனது அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்பட்டது. நான் நம்முடைய தேவி சீதையை அவன் கவர்ந்து சென்றிருக்கிறான். போராவது தர்மமாவது அவன் உயிரை எடுப்பது ஒன்றுதான் வழி. இதற்காக எதற்கு நாம் தூதுவனை அனுப்ப வேண்டும். இது வேண்டாத செயலாக எனக்குப்படுகிறது என்று குறிப்பிட்டேன்.” “இராமன் என்னைச் சமாதானம் செய்து, இல்லை! இல்லை! நாம் அதுபோல செய்வது தர்மம் ஆகாது. நாம் தூதுவனை அனுப்புவது தான் முறை என்றான். யார் இப்பொழுது தூதுவனாக ராவணனிடம் செல்லப் போவது? சென்ற முறை நாம் அனுமனை அனுப்பி வைத்தோம். அவனைவிடச் சிறந்த தூதுவன் யாருமே இருக்க முடியாது.

ஆனால், அவனை மீண்டும் அனுப்பினால், அனுமனைத் தவிர வேறு தகைமை வாய்ந்த வீரர்கள் நம்மிடையே இல்லை என்று இராவணன் நினைக்கக்கூடும். விபீஷணனை அனுப்ப இயலாது ஏனெனில் அவன் ராவணனின் குலத்தைச் சார்ந்தவன் அடுத்தபடியாக சுக்ரீவனைத் தூதுவனாக அனுப்ப முடியாது ஏனெனில் அவன் கிஷ்கிந்தையின் அரசன். ஆகவே, நான் அங்கதனைத் தூதுவனாக அனுப்புவது என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறினான். எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்து தங்கள் ஒப்புதலையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தெரிவித்தார்கள்.” “இராமன் சொன்னதைக் கேட்டஅங்கதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ‘இராமன் என்னைத் தூதுவனாக தேர்வு செய்திருக்கிறாரா! ஆஹா! ஆஹா! என்ன பாக்கியம் நான் செய்திருக்கிறேன்!

அதுவும் அனுமன் தூதுவனாகச் சென்றதுபோல் நான் செல்லப் போகிறேனா!’ கூட்டத்திலிருந்து தனியாக விடுபட்டு நடந்தான். சற்றுத் தள்ளிப் போய்க் குதித்தான். அங்கு நீண்டு வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கிளைகளை எம்பி எம்பிக் குதித்துத் தொட்டான். அங்கிருந்த பூச்செடிகளில் இருந்து பூக்களை எடுத்து தன் தலையில் சொரிந்து கொண்டான். இடுப்பில் வைத்திருந்த, ராமன் அவனுக்கு அளித்த அந்தப் போர்வாளை எடுத்து முத்தமிட்டான். அதைக் காற்றில் வேக வேகமாகச் சுழற்றினான் . அவன் நடையில் ஒரு துள்ளல் இருந்தது.”

“தூதுவனாக இராவணன் அவையில் அங்கதன் நுழைந்தான். ஆசனம் ஒன்றின்மேல் கால்மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான். சிரித்தபடி இராவணனைப் பார்த்து “நான் யார் தெரிகிறதா” என்றான்.”“இராவணன் பலத்த சிரிப்புடன்’’ யார் இந்த குரங்கை அவையின் உள்ளே அனுமதித்தது? வெளியே போ” என்றான். “நான் நாயகன் அனுப்பிய தூதுவன், நாயகனின் சேவகன்.” “நாயகனா? யார்? யார் உன் நாயகன்?” “பூத நாயகன்! இந்த பூமியின் நாயகன்! பூப் போல மலர்ந்திருக்கும் சீதையின் நாயகன்!

நீ எப்பொழுதும் ஓதிக் கொண்டிருப்பாயே அந்த வேதத்தின் நாயகன்! பிரபஞ்சத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் நாயகன். உனக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறது அல்லவா? உன் விதியை நிர்ணயிக்கப் போகின்ற நாயகன்! இது போதுமா? இன்னும் சொல்ல வேண்டுமா?” ஆசனத்தில் இருந்து எழுந்தான். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே தோள்களையும் தொடைகளையும் தட்டிக் கொண்டே “ நாயகன், என் நாயகன்” என்று கூறியபடி பெரிதாகச் சிரித்தான்.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

கோதண்டராமன்

The post அவன் தம்பி appeared first on Dinakaran.

Tags : Sarayu river ,Lakshavan ,Urmila ,Avan Thambi ,
× RELATED மனதிற்கினியான்