×
Saravana Stores

ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்

12-ஆம் நூற்றாண்டில் ஒருநாள்… சோழப் பேரரசின் வரலாற்றில், இரண்டாம் குலோத்துங்க சோழர் அரியணை ஏற இருக்கின்றார் என்ற தகவலை அறிந்ததும், மக்கள் எல்லோரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தலைநகரம் விழாக்கோலம் பூண்டது. வீரர்கள், மன்னரின் வீரத்தைப் பாராட்டினார்கள். புலவர்கள், அரசரின் புலமையைப் புகழ்ந்தார்கள். பாணர்கள், இசையால் பாடிப் பாராட்டினார்கள். அரண்மனையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். வில்லேர் உழவர்களும் சொல்லேர் உழவர்களும் (தலை சிறந்த வீரர்களும் பெரும் புலவர்களும்) திரண்டார்கள். அமைச்சர்கள், சிற்றரசர்கள், சேனைத்தலைவர்கள் எனக் குவிந்தார்கள். மாபெரும் வீரரான குலோத்துங்க சோழர், மணிமுடி சூடிக் கொண்டார்.

நடன மாதர்கள் ஆடினார்கள். மற்ற நாட்டு அரசர்கள் கப்பம் கட்டினார்கள். பாணர்கள் பாட, பாவலர்கள் வாழ்த்தினார்கள். எங்கும் வாழ்த்தொலிகள் முழங்கின. அந்த நேரத்தில் மன்னருக்கு இணையாகச் சரியாசனத்தில் அருகில் அமர்ந்திருந்தவர் எழுந்தார். ‘‘வாழ்க மன்னர்!’’ என்று பெருங்குரலில் முழங்கினார். அனைவரும் அமைதியாக அவரைப் பார்த்தார்கள். வாழ்த்தியவரின் வாயிலிருந்து கவிதை வெளிப்பட்டது.

“ஆடும் கடைமணி நாவசையாமல் அகிலமெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிரான்’’
– என்று பாடினார்.

காது குளிரக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், பாடலின் மூன்றாவது அடியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
அப்போது எல்லோரும் வியக்கும்படியாக,

“… என்று நித்த நவம் பாடும் கவிப்பெருமான் ஒட்டக்கூத்தன் பதாம்
“புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழனென்றே யெனைச் சொல்லுவரே’’
– என்று, பாடலின் பின் இரண்டு அடிகளையும் பாடிமுடித்தார், முடிசூடிக்கொண்ட சோழமன்னர்.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. காரணம்?

‘‘எந்தவிதமான குறையுமில்லாமல் அனைவரையும் காப்பாற்றும் சக்கரவர்த்தி…’’ என்று அரசர் அருகில் இருந்தவர் பாட, அரசரோ, ‘‘இவ்வாறு பாடக் கூடிய ஒட்டக்கூத்தரின் திருவடித் தாமரைகளைத் தன் தலையில் சூடும் குலோத்துங்க சோழன் என்றே என்னைச் சொல்வார்கள்!’’ என்று பாடி முடித்தார். அரசர் அருகில் சரிசமமாக அமர்ந்து பாடியவர், ஒட்டக்கூத்தர்! அவர் அருகில் நின்று, ‘‘ஒட்டக்கூத்தரின் திருவடிகள் என் தலைமேல்’’ என்று பாடியவர், சோழ சக்கரவர்த்தி! சோழ சக்கரவர்த்தியே தன் தலைமேல் ஒட்டக் கூத்தரின் திருவடிகளைத் தன் திருமுடி மேல் சூடுவதாகச் சொல்லியிருக்கிறாரே என்றால், ஒட்டக்கூத்தரின் பெருமை எந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்!

மூன்று தலைமுறை அரசர்களுக்குக் குருநாதராக இருந்தவர், ஒட்டக்கூத்தர் எனும் இந்தப் பெரும் புலவர் மட்டுமே! புவியரசரால் போற்றப்பட்ட கவியரசர் ஒட்டக் கூத்தர்! இவருக்கு கொடைப்புலவர், கவிராட்சசன், காளக்கவி, சர்வக்ஞ கவி, கவிச்சக்கரவர்த்தி என மன்னர்களாலும் மக்களாலும் போற்றப்பட்டவர், ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தரின் தந்தை, சிவசங்கரன்; தாயார், வண்டார்குழலி.

ஒட்டக்கூத்தரின் இயற்பெயர், ஆனந்தக்கூத்தர். தில்லையில் நடமாடும் ஆனந்தக்கூத்தரான நடராஜப்பெருமான் திருநாமத்தை, இவருக்கிட்டார்கள் பெற்றோர்கள். ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர், மணவை. திருத்துறைப் பூண்டியில் இருந்து 12-கி.மீ தொலைவில் உள்ள மணக்குடி என்ற ஊரே, இந்த மணவை (தனிப் பாடல்) தண்டியலங்காரத்தில் வரும் மேற்கோள் பாடல் ஒன்றில், ‘மலரி வரும் கூத்தன்தன் வாக்கு’ என்று உள்ளது. இந்த ‘மலரி’ யே ஒட்டக்கூத்தரின் பிறப்பிடம் ஆகும். இந்த ஊர் திருச்சிக்கு அருகில் உள்ள ‘திருவெறும்பூர்’ ஆகும் – என்பது பெரும் ஆராய்ச்சியாளரான சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சி. இதை மற்ற ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ‘மலரி’யும் ‘மணக்குடி’யும் ஒன்றே என்ற ஆராய்ச்சியும் உண்டு.

ஒட்டக்கூத்தர் என்று பெயர் பெற்றதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம்… ஒட்டக்கூத்தர் செங்குந்தர் மரபில் பிறந்தவர். அந்த மரபைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, ஒட்டக்கூத்தரிடம் சென்று, ‘‘ஐயா! தாங்கள் கலைமகளின் அருளை முழுமையாகப் பெற்றவர். அப்படிப்பட்ட தாங்கள், நம் மரபின் அடையாளமாகிய ஈட்டி எனும் கருவியைப்பற்றி ஒரு நூல் பாடியருள வேண்டும்!’’ என வேண்டினார்கள்.

‘‘செங்குந்தர் தலைப் பிள்ளைகள் எழுபது பேர்களின் (1008-என்றும் சொல்வதுண்டு) தலைகளைக் கொண்டு வாருங்கள்! அவற்றின் மீது அமர்ந்து, நீங்கள் விரும்பும்படியான நூல் ஒன்றைப் பாடுகிறேன்’’ என்றார் ஒட்டக்கூத்தர். அதைக் கேட்டவர்களும் அப்படியே செய்தார்கள். ஒட்டக்கூத்தர், அந்தத் தலைகளின் மேல் அமர்ந்து, தன் வழிபாடு கடவுளான அம்பாளை வாழ்த்தி, ‘ஈட்டி எழுபது’ எனும் நூலைப் பாடத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க, அறுபட்ட தலைகள் ஒவ்வொன்றாக அதனதன் உடம்பில் போய் ஒட்டிக் கொண்டன. இறந்தவர்கள் எழுபது பேர்களும் உயிர்பெற்று எழுந்தார்கள். இவ்வாறு தலைகளை ஒட்டச் செய்த புலவர் என்பதால், ‘ஒட்டக்கூத்தர்’ எனும் பெயர் ஏற்பட்டது.

ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானது, ‘தக்கயாகப் பரணி’. ஒட்டக் கூத்தர், தம்முடைய வாழ்நாள் இறுதியில் பாடிய நூல் இது. அனுபவ முதிர்வில் வெளிப்பட்டது இந்த நூல் என்பது, இதில் உள்ள பொருள் வளத்தால் விளங்கும். அற்புதமான இந்த நூல் உருவானதே ஓர் அதிசயமான வரலாறு! ஒட்டக்கூத்தர், ‘தக்கயாகப் பரணி’ பாடியதற்கான காரணத்தை, 400-ஆண்டுகளுக்கு முன்வந்த ‘வீர சிங்காதன புராணம்’ எனும் நூலில் ‘அகளங்க சருக்கம்’ எனும் பகுதி விரிவாகக் கூறுகிறது.

ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலத்தில், கும்பகோணவீர சிங்காதன மடத்தில் துறவிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர், திருஞான சம்பந்தர் பாடிய திருவீழிமிழலை ஈசர் திருப்பதிகத்தைப் பாடியவாறே பிட்ஷை எடுத்துக் கொண்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் வீட்டின் முன்னால் வந்ததும், அப்பதிகத்தில் உள்ள ‘கல்லால் நிழற்கீழாய் இடர் காவாய்!’ என்ற பாடலைப் பாடினார். பாடல் ஒட்டக்கூத்தரின் காதுகளில் விழுந்தது. பலகாலம் சிந்தித்தும் இப்பாடலின் பொருள் தமக்கு விளங்காமல் இருந்ததால், இந்த அடியாருக்காவது அப்பாடலின் பொருள் தெரிந்திருக்குமோ என்ற எண்ணத்தில், பாடல் பாடிவந்த துறவியிடம் அப்பாடலின் பொருளைக் கேட்டார் ஒட்டக்கூத்தர்.

வந்த துறவி, ‘‘இதன் பொருள் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்து நீங்கள் சொன்னாலும் இந்தப் பாட்டின் ஒரு வார்த்தைக்குக்கூட, நீங்கள் சொல்லும் பொருள் சரிப்பட்டு வராது’’ என்றார். ஒட்டக்கூத்தருக்குக் கோபம் வந்தது; சாட்டையை எடுத்துத் துறவியை ஓர் அடி அடித்தார். அடி தாங்காத துறவி இறந்து கீழே விழுந்தார். அதையறிந்த மற்ற துறவிகள் எல்லாம் ஒன்று திரண்டு, கூத்தரைக்கொல்ல வந்தார்கள். தகவலறிந்த கூத்தர் வேகமாகப்போய்ச் சோழ மன்னரிடம் நடந்ததைச் சொன்னார். அதற்குள் துறவிகள் அரண்மனைக்கு வந்து, ‘‘மன்னா! ஒட்டக்கூத்தர் துறவி ஒருவரைக் கொன்று விட்டார். அவரைக் கொன்று பழிக்குப்பழி வாங்கப் போகிறோம்’’ என்று அழுத்தமாகக் கூறினார்கள்.

மன்னர் பார்த்தார்; ‘‘மூன்று தலைமுறைகளாகக் குருவாக இருக்கும் ஒட்டக்கூத்தரைக் காப்பாற்றிவிட வேண்டும். அவரைக் கொல்லாமல்விட மாட்டோம் என்று துறவியர்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டையும் சமாளிக்க வேண்டும்’’ என எண்ணினார் மன்னர். உடனே தன் மகனிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, அவனை ஒரு மூடு பல்லக்கில் அமரச் செய்த மன்னர், துறவிகளிடம் வந்து, ‘‘துறவிகளே! இதோ! இந்த மூடு பல்லக்கில் கூத்தர் பெருமான் இருக்கிறார். அவரை எடுத்துப்போய் உங்கள் விருப்பம்போலச் செய்யலாம்’’ என்றார்.

துறவிகள் திருப்தியோடு மூடு பல்லக்கைத் தூக்கிச் சென்றார்கள்; ஓரிடம் வந்ததும் மூடு பல்லக்கைத் திறந்து பார்த்தார்கள். உள்ளே இளவரசர் இருந்தார். விவரம் புரிந்த துறவிகள் மன்னரின் நோக்கத்தை அறிந்து பாராட்டினார்கள்; இருந்தாலும் ஒட்டக் கூத்தரைக் கொல்வதில் இருந்து பின்வாங்க வில்லை. மன்னரின் நிலையும் துறவிகளின் போக்கும் அறிந்த ஒட்டக்கூத்தர் தாமே துணிந்து துறவிகளுடன் சென்றார். சூரியன் மேற்கில் மறைந்தது.அதைப்பார்த்த ஒட்டக்கூத்தர், ‘‘நான் சிவபூஜை செய்யவேண்டும்!’’ என்றார். துறவிகள் உடன்பட்டார்கள்.

ஒட்டக்கூத்தர் சிவபூஜை செய்யத் தொடங்கி முடித்தார்; முடித்ததும் அங்குள்ள முளைச்சாளம்மை எனும் காளி கோயிலின் உள்ளே புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார். அதையறிந்த துறவிகள், ‘‘கோயிலுக்குள் போய்க் கொலை செய்வது முறையல்ல. பொழுது விடிந்ததும் நம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்’’ என்று கோயிலைச் சுற்றிக் காவல் இருந்தார்கள். கோயிலின் உள்ளேயிருந்த ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம், ‘‘தாயே! என்னைக் காப்பாற்று!’’ என்று வேண்டினார்.

ஒட்டக்கூத்தர் முன்னால் காளி தோன்றினாள்; ‘‘அந்தத் துறவிகளின் தெய்வம் வீரபத்திரர். ஆகையால் வீரபத்திரக்கடவுள் மீது ஒரு நூல் பாடு!’’ எனக் கூறினாள். அதைக் கேட்ட ஒட்டக்கூத்தர், ‘‘அம்மா! நீ சொன்ன படியே நான் வீரபத்திரக்கடவுள் மீது பாடுகிறேன். நீ எழுது!’ என வேண்டினார். காளியும் ஒப்புக்கொண்டு எழுதினாள். அப்போது காளியின் (மற்றொரு) கையிலிருந்த தீபம் சற்று அசைந்தது. அந்த நேரத்தில், வீரச்சுவை பாடும் நிலையில் இருந்த ஒட்டக்கூத்தர், ‘‘கைத்தீபம் அசைவது ஏன்?’’ என்று கேட்டுக் கோபத்தில் காளியின் கன்னத்தில் அறைந்தார். தேவி வாயே திறக்க வில்லை. அடுத்து சாந்தச் சுவை பாடும்போது, தாம் செய்த தவறை உணர்ந்த ஒட்டக்கூத்தர், ‘‘அம்மா! தேவி! மன்னித்து விடு!’’ என வேண்டினார்.

தேவி புன்முறுவல் பூத்தாள்; ‘‘வருந்தாதே!’’ என்றுகூறி ஆறுதல் அளித்தாள். பொழுது முடிவதற்கும் ஒட்டக்கூத்தர் பாடி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. ஓர் இரவிலேயே பாடி முடிக்கப்பட்ட அரும்பெரும் நூல், தக்கயாகப் பரணி! ஆலயத்திற்கு வெளியே இருந்த துறவிகள் எல்லாம், ‘‘ஒட்டக்கூத்தா! வெளியில் வா!’’ என்று கூவினார்கள். ஒட்டக்கூத்தரோ, ஒரு துவாரத்தின் வழியாகத் தாம் பாடிய பரணி நூலை நீட்டினார். அதை வாங்கிப்படித்த துறவிகள், அவரைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்; கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் மாற்றிக் கொண்டார்கள். ஒட்டக் கூத்தர் உயிர் பிழைத்தார். ஒட்டக்கூத்தரின் உயிரைக்காத்த நூல், தக்க யாகப்பரணி! தமிழின் ஆழம், அகலம், உயரம், நீளம், சொற்சுவை, பொருட்சுவை என அனைத்தும் நிறைந்த நூல்-தக்கயாகப் பரணி! சிவபெருமானுக்கு எதிராக, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தட்சன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் அழிக்கப்பட்டு, தட்சனும் தண்டிக்கப்பட்டான். இத்தகவல்களை விரிவாக அருந்தமிழ்ப் பாடல்களாக விவரிக்கிறது, தக்கயாகப் பரணி!

நூலில் உள்ளவற்றில் ஒரு சில… நூலில் உள்ள சிவநாம வகைகள்: அடிப்பெருங் கடவுள், அந்திப்போதனையான், அரன், அற்புதத்துயிர்க்கிழத்தி புக்குழி, அனலன், ஆதி வானவன், ஆலம்அமுது செய்யுமயன், ஆலாலமயிலு நாதன், இருவர்க்கரியராம் எங்கணாயகர், இருவரே தெரியவரியர், இறை, இறைமலை வில்லி, இறைவர், ஈசன், உமை வாழ்வதொரு பாகர், ஐயன், கண்ணுதற்கடவுள், கண்ணுதன் முதற்கடவுள், கபால நிரைப்பேரார மார்புடைய வீரர், குன்றவில்லி, கொன்றையார், சடாடவி முடித்தேவர், சிங்கமுங் கற்கியும் பன்றியுஞ் செற்றவர், சிவன், சூலபாணி, சேயோன், தலைவர், தனிமூல முதல்வர், தாராகவண்டந் தொடுத்தணிந்தோர், திரிபுரம் பொடிபடப்பொரும் பொருநர், தொல்லை நாயகர், நக்கர், நாதர், நாயனார், நிசிந்தர், பணிமதாணியோர், பரசுபாணி, பரம்பரன், பரமன், பரன், பலிமேவு நாயகன், பிரான், புராரி, பெருமான், பெருமானடி, பொலஞ்செக்கர் சடையான், மதியமூர் சடாமோலி மகிணர், மழுவார், மழுவாளி யார், முக்கணெம்மாதி, முத்தர், முப்பத்து முத்தேவராயவர், முப்புரஞ் சுட்ட வீரர், மூவராயவரின் முதல்வர், மேருதரர், மேருவரையிற் கடவுள், ரசதக்குன்றவர், ராசராச புரேசர், வல்லவன், வெள்ளிமலைப் பெருமான்!

இந்தத் திருநாமங்களில் சிலவற்றைத் தவிர, பெரும்பாலானவை ஒட்டக்கூத்தரின் சொல்லாட்சி! அம்பிகையைப்பற்றித் தக்கயாகப் பரணி கூறும் திருநாம வகைகளைப் பார்க்கலாம்! அகிலலோக நாயகி, அகிலலோக மாதா, அகிலாண்ட நாயகி, அந்திப்போதனையானுடன் ஆடுந்திரு, அமலை, அன்னை, ஆரணாகாரி, இகன்மகள், இமவான் மகள், இரணியருரம் பிளவுபட நடு முகரி, இறைமகள், இறையாள், இறைவி, உமையாள், உமை, உயிர்க்கிழத்தி, உலகினன்னை, உலகுடையசெல்வி, உவணவூர்தி ஊர்வாள், ஐயை, ஒப்பரிய நாயகி, கடவுணீலி, கலை யுகப்பாள், கனகன் ஆகம் இருகூறு படு கூரேக நகநாயகி, கானநாடி, கௌரி, த்ரிபுரபயிரவி, தலைவி, தொல்லைநாயகி, நாயகி, நிலாவீசு சடில மோலி, நூபுராதார சரணி, பங்கன கலத்திறைவி, பச்சைவிளக்கு, பணி மதாணி மார்பாள், பத்ரகாளி, பரம்பரன் தேவி, பாகனகங்குழைவித்த பவித்ர பயோதரி, பிரம்மற்குமம்மனை, பிரம்மனைப் பண்டு பெற்ற பெருந்திரு, புணரியில் துயில்வல்லி, புவன நாயகி, மங்கல மகள், மலைமகள், மாகாளி, மாதேவி, மாயோள், மூலநாயகி, மோகினி, யோகமுதலிறைவி, யோக யாமளத்தினாள்,வன் மானுகைத்த கொடி, வேதங்கவர் கிளவித் திருமின், வேதநாயகி! அம்பிகையின் இந்தத் திருநாமங்களிலும் பெரும்பாலானவற்றில் ஒட்டக்கூத்தரின் சொல்லாட்சி ஆழமாக இடம் பெற்றிருக்கிறது. தட்சயாகம் என்ற பெயரில் உபநியாசம், சொற்பொழிவு செய்ய வேண்டுமென்றால், ஒட்டக்கூத்தரின் ‘தக்கயாகப் பரணி’ நூலைவிட உயர்ந்த வேறு நூல் கிடையாது.

பி.என்.பரசுராமன்

The post ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும் appeared first on Dinakaran.

Tags : Chola Empire ,Kulothunga II ,Chola ,
× RELATED சோழர் காலத்திலிருந்தே...