*கோத்தகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பேச்சு
கோத்தகிரி : இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என கோத்தகிரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பாண்டியன் பார்க், மிளிதேன், நெடுகுளா, எஸ்.கைகாட்டி, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆ.ராசா பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றபோது உச்ச கட்டத்தில் இருந்த கொரோனாவை கட்டுப்படுத்தி, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கினார். மகளிருக்கு உரிமை தொகை, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000, புதிய கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கால்வாய்கள், பாலங்கள், தார் சாலைகள், புதிய தொழிற்சாலைகள், உலகத்தை ஈர்க்கின்ற 8 லட்சம் ரூபாய் முதலீடு போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்து கொண்டிருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர், என்னை உங்களிடத்தில் ஒப்படைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தேர்தல் பரப்புரையில் கடந்த 15 நாட்களாக ஒரு முழக்கத்தை முன்னெடுக்கிறார் என்று நீங்கள் அறிவீர்கள். அது என்ன முழக்கம் என்றால் இந்தியாவை காப்பாற்ற உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்பதாகும்.
அப்படி என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. யாருடைய கையில் பாதுகாப்பாக இல்லை என்றால் மோடியின் கையில் இந்தியா பாதுகாப்பாக இல்லை. குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல கடந்த பத்து ஆண்டு காலம் மோடியிடம் ஒப்படைத்த காரணத்தினால் இன்றைக்கு இந்தியாவில் எல்லாமே வேலைவாய்ப்பாக இருந்தாலும், வறுமையாக இருந்தாலும் என எல்லாவற்றிலும் இந்தியா மிக மோசமான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி மதவாதத்தை தூண்டி அதிலே பிரிவினைகளை ஏற்படுத்தி அதனால் ரத்த ஆறு ஓட வைத்து அதிலே தனது வாக்கு வங்கியை பலப்படுத்தி இன்னொரு முறை பிரதமராக வரலாம் என மோடி கனவு காண்கிறார். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று அதற்கு இந்தியாவின் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியா பல மதம், பல மொழி, பல பழக்க வழக்கங்கள், பல உடை,பல உணவு உள்ளிட்ட பல வேற்றுமைகள் இருந்தது. இந்த வேற்றுமைகளை உள்ளடக்கி ஒரு ஒற்றுமையை உருவாக்குதற்கு தான் காந்தியின் அறிவுரையில் பெற்று நேருவும், அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் சட்டத்தை எழுதினார்கள்.
அந்த அரசியல் சட்டம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து. எல்லா மதத்தவருக்கும் எல்லா பாதுகாப்பும், சலுகைகளும் கொடுத்தது. இப்படி எழுதப்பட்ட அரசியல் சட்டத்திற்கு இப்போது ஒரு ஆபத்து வந்துவிட்டது. ஒரே மதம் தான் இந்த மண்ணில் இருக்க வேண்டும். ஒரே மொழி தான் அது இந்தி மட்டும் தான் இருக்க வேண்டும்.
ஒரே உணவு முறை தான் இருக்க வேண்டும் என்கிறார் மோடி. இப்படிப்பட்ட ஒற்றைத் தன்மையை ஒழிக்க வேண்டும். தற்போது தமிழ்நாடு எப்படி ஒற்றுமையோடு இருக்கிறதோ அதேபோல இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். ஊழல் ஒரு பக்கம், மதவாதம் ஒருபக்கம் இதை இரண்டையும் சேர்த்து எதிர்க்கும் துணிச்சல் இந்தியாவில் யாருக்கும் இல்லை. டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்தார். அவரை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைந்துள்ளார்கள். ஜார்க்கண்ட முதலமைச்சர் ஹெமந்த் சோரன் அவரை சிறையில் அடைத்துள்ளார்கள்.
இதை அமெரிக்கா, ஜெர்மன் கண்டிக்கிறது. தேர்தல் நேரத்தில் தலைவர்களை சிறையில் அடைப்பது ஜனநாயகம் இல்லை என்கிறது. ஐநா சபையில் இருந்து வந்த குரல் ஜனநாயகத்தில் தேர்தல் நடைபெறுகிற போது இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களை சிறையில் அடைந்துள்ளது தவறு அதற்கு மோடியிடம் பதில் இல்லை.
பன்னாட்டு சமூகம் இந்தியாவை பார்த்து சிரிக்கிறது. மோடியை பார்த்து சிரிக்கிறது. ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. எனவே இந்த தேசத்தை காப்பாற்ற, அரசியல் சட்டத்தை காப்பாற்ற, இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இப்பிரச்சாரத்தின்போது சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக், ஊட்டி எம்எல்ஏ கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் appeared first on Dinakaran.