- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- விஜய் வசந்த் பிரசாரம்
- நாகர்கோவில்
- விஜயவாசாந்த்
- கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி
- இந்தியா கூட்டணி கட்சி
- கூட்டணி கட்சி
- பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி
*காங். வேட்பாளர் விஜய்வசந்த் பிரசாரம்
நாகர்கோவில் : இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்றூரில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கல்லு பாலத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது, அவர்கள் பல இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். முடங்கிப் போன நான்குவழி சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். மந்தமாக நடந்து கொண்டிருந்த இரட்டை ரயில் பாதை திட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் நான்கு வழிச்சாலை திட்டமும், இரட்டை ரயில் பாதை திட்டமும் முடிந்துவிடும்.அதற்காக மீண்டும் ஒரு தடவை வாய்ப்பினை கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நான் பொய் பிரசாரம் செய்வதாக கூறி வருகிறார். அப்படி என்றால் நீங்கள் செய்த திட்டம் என்ன என நான் கேட்கிறேன். 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரும் என கூறினார்கள், உங்களுக்கு யாருக்காவது பணம் வந்து உள்ளதா?.காங்கிரஸ் அரசு கொண்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தாலும் பெட்ரோல் – டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது, தேர்தல் வந்துவிட்டால் ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் குறைத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறது. தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றி விடுகிறார்கள்.
மணிப்பூரில் நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் நமக்குத் தெரியும். பிரதமர் பாலம் திறக்க செல்கிறார், விமான நிலையம் திறக்க செல்கிறார். அம்பானியின் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார். ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லவில்லை. அவர்கள் மக்கள் பிரச்னையை கண்டு கொள்வதில்லை.
எனவே ஒன்றிய பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது. பொன்.ராதாகிருஷ்ணன் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுப்பேன் என கூறி ஜூலை போராட்டம் நடத்தினார். இன்றுவரை கல்வி உதவித் தொகை பெற்று கொடுத்தார்களா?. தேர்தல் நேரத்தில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும். இதுதான் அவர்களது நோக்கம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கன்னியாகுமரியில் ஏற்படும் மாற்றம் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி அரசு பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய், வேலையில்லா, படித்த பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிவித்துள்ளது, எனவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார், பத்மநாபபுரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ரெமோன் மனோதங்கராஜ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் வினுட் ராய், ஜெபா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய பா.ஜனதா அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது appeared first on Dinakaran.