×

21 குண்டுகள் முழங்க விக்கிரவாண்டி எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் தகனம்: அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

விழுப்புரம்: உடல்நலக்குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி (70). தெற்கு மாவட்ட திமுக செயலாளரான இவர் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார்.

கடந்த 5ம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மேடைக்கு வந்தார்.  அப்போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் கலைஞர் அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புகழேந்தியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று காலை அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கௌதமசிகாமணி, லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் புகழேந்தியின் இறுதி ஊர்வலம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அதே கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 21 குண்டுகள் முழங்க விக்கிரவாண்டி எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் தகனம்: அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 21 ,Gundam Vikrawandi MLA ,Villupuram ,Vikravandi ,MLA ,Bhujahendi ,Phugahendi ,Athiyur Thiruvadhi ,DMK ,South District ,Vikravandi Assembly ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...