- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- யூனியன் உளவுத்துறை
- சென்னை
- யூனியன் அரசு
- யூனியன் உளவுத்துறை திட்டம்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் பாஜ கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பல தொகுதிகளில் அது டெபாசிட் இழக்கும் என்றும் ஒன்றிய அரசின் உளவுத்துறை கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் மீடியாக்கள் மூலம் தங்கள் பிரசாரத்தை பாஜ தொடங்கியது. கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகளை வெளியிட்டது. ஆனால் அந்த கணிப்புகள் எல்லாம் ஒரு அறைக்குள் தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் என்பது மக்கள் மனதில் உள்ள கருத்துகள் மூலம் வெளியாகின. இதனால் ஆரம்பத்தில் கருத்து திணிப்புகளை வெளியிட்ட மீடியாக்கள் தற்போது அடக்கி வாசிக்க தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியையும், கூட்டணியையும் முன்னிறுத்தாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த தொடங்கினார். அதோடு தன்னுடைய தொகுதியில் முடங்க ஆரம்பித்தார். ஓ.பன்னீர்செல்வம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், ஆரம்பத்தில் மீடியாக்களில் மோடி, அமித்ஷா பிரசாரம், கோவையில் அதிமுக வேட்பாளருடன் அண்ணாமலையின் மோதல் என செய்திகள் தொடர்ந்து வந்ததால் ஏதோ பாஜ கூட்டணி பல தொகுதிகளில் 2வது இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்ற அளவில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இப்போது பிரசார வேகம் ஆரம்பித்தவுடன் பாஜவின் உண்மை முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. மக்களின் மனநிலையும் வெளிப்பட தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் எழுப்பும் கேள்விகளுக்கு பாஜவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கூற முடியாமல் சுதந்திரம் அடைந்த காலத்தில் உள்ள பிரச்னைகளை எல்லாம் இப்போது பேசத் தொடங்கிவிட்டனர். இளைஞர்களை ஏமாற்றி, அதை வைத்து குளிர் காயலாம் என்று பாஜ கருதியது. ஆனால் இப்போது விரல் நுனியில் தகவல்கள் வெளியில் தெரிவதால், பாஜவினர் சொல்வது எல்லாம் பொய் என்று தெரிந்துவிடுகிறது. அதைக் கூட கண்டுபிடிக்கமுடியாமல், தமிழக வாக்காளர்களை ஏமாளிகளாக நினைத்து பேசி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பாஜவின் ஆதரவு சரியத் தொடங்கிவிட்டது. மேலும் பாஜவுக்கு பல தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல் திணறி வந்தனர்.
குறிப்பாக அண்ணாமலையே சொந்த ஊரான கரூரில் நிற்காமல் கோவையில் நின்றார். கோவையைச் சேர்ந்த முருகானந்தம், திருப்பூரில் நிறுத்தப்பட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்.பாலகணபதி திருவள்ளூரிலும், தேனியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்திலும், தஞ்சையைச் சேர்ந்த டிடிவி.தினகரன் தேனியிலும், விருதுநகரைச் சேர்ந்த சீனிவாசன், மதுரையிலும், விழுப்புரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமன் திருவண்ணாமலையிலும், சென்னையில் வசிக்கும் ராதிகா விருதுநகரிலும் தொகுதி மாறி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கணிசமான ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் உள்ள ஜாதி கட்சிகளின் தலைவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்து நிற்க வைத்துள்ளனர். இப்படி பாஜ தொட்டதெல்லாம் வீணாகி வந்தது. தற்போது ஒன்றிய உளவுத்துறை மாநிலம் முழுவதும் சர்வே எடுத்துள்ளது. அதில் பல தொகுதிகளில் பாஜ டெபாசிட் வாங்காது என்று தெரியவந்துள்ளது. பெரிய தலைவர்கள் போட்டியிடும் கோவை, கன்னியாகுமரி, நெல்லை, வடசென்னை, மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகளில் தற்போது பாஜ 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணியில் போட்டியிடும் தலைவர்களுக்கும் அதே நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. அவர்களுக்கு ஒரே ஆறுதல் வேலூரில் பாஜ அணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2வது இடத்தில் உள்ளார். மற்ற இடங்களில் 3வது இடத்திலும், சில இடங்களில் 4வது இடத்திற்கும் சென்று விட்டனர்.
இதனால் மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தொடர் பிரசாரங்களை செய்தால்தான் டெபாசிட் இழக்காமல் தப்பிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இந்த ரிப்போர்ட் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தமிழகத்தில் தொடர் விசிட் அடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். அதேபோல பாஜ வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்காக ஆரம்பத்தில் ரூ.50 கோடி வழங்கப்படும் என்று கூறினார்களாம். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கட்சியில் இருந்து வழங்கவில்லையாம். கோவையில் மட்டும் வெளி மாநிலத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் இறக்கப்பட்டு பணத்தை செலவு செய்கிறார்களாம். அண்ணாமலைக்கு கட்சி பணம் கொடுக்கா விட்டாலும், வழக்கம்போல நண்பர்கள் (பெரிய தொழிலதிபர்கள்) பணத்தை செலவு செய்கிறார்களாம். அதுவும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்குப் பயந்து அவர்கள் பணத்தை கொடுக்கிறார்களாம். இதனால், மற்ற வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திணறி வருகின்றனர். இப்படியே சென்றால், கட்சி பணத்தை தராவிட்டால் 3வது இடம் மட்டுமல்ல, 4வது இடம், ஏன் நோட்டாவுக்கு கீழே சென்றாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள்.
The post தமிழகத்தில் 3வது இடத்துக்கு தள்ளப்படும்; பாஜ பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.! ஒன்றிய உளவுத்துறை கணிப்பு பற்றிய பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.