×
Saravana Stores

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனி அணி: அன்புமணி அறிவிப்பால் அண்ணாமலை ஷாக்; பலிக்காமல் போகிறதா பாஜவின் பகல் கனவு?

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக இடம் பெற்று, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆரம்பத்தில் பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கு பாமக முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜ உடனான கூட்டணிக்கு ராமதாசும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனால் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ராமதாசை அன்புமணி சம்மதிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் ராமதாசும், அன்புமணியும் சமாதானம் பேசினர். இந்த தேர்தலை கவனத்தில் கொள்ள வேண்டாம். நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். அப்போது அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என்று விளக்கி கூறி உள்ளனர்.

இதையடுத்தே நிர்வாகிகள் சமாதானமடைந்து பாஜவுடன் கூட்டணி உறுதியானது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் வேலூரில் நடந்த பிரசாரத்தில் பேசுகையில், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் 3வது கூட்டணி அமையும் என்று பேசி உள்ளார். அன்புமணியின் இந்த பேச்சைக்கேட்டு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அண்ணாமலை இந்த தேர்தலை வைத்து வேறு ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளார். அதன்படி, மக்களவை தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும் 7 முதல் 10 தொகுதிகளில் 2வது இடத்தை பிடிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் பாஜவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்பதை காட்ட வேண்டும். இதை வைத்து இப்போது அமைத்திருப்பதை விட இன்னும் வலுவான கூட்டணி பாஜ தலைமையில் அமைத்து, 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இந்தசூழ்நிலையில் அன்புமணியின் இந்த அறிவிப்பு, தமிழக பாஜ கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட போது, ‘பாஜவுடன் பாமக கூட்டணி வைத்ததை நிர்வாகிகள் மட்டுமல்ல, அடிமட்ட தொண்டர்களும் ஏற்கவில்லை. பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். இதனால் பல தொகுதிகளில் பாமகவினரும், பாஜகவினரும் இணைந்து செயல்படுவதில் சுணக்கம் நிலவுகிறது. இதைசரிப்படுத்தவே அடுத்து வரும் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி என அன்புமணி அறிவித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக இருக்காது. இது அண்ணாமலைக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தான்,’ என்றனர். அன்புமணியின் இந்த பேச்சால் அண்ணாமலை மட்டுமில்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் சாதித்து விடாலாம் என்று பாஜ கண்ட பகல்கனவு பலிக்காமல் போய்விடும் என்று தெரிகிறது.

The post 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனி அணி: அன்புமணி அறிவிப்பால் அண்ணாமலை ஷாக்; பலிக்காமல் போகிறதா பாஜவின் பகல் கனவு? appeared first on Dinakaran.

Tags : 2026 Legislative Assembly Elections ,BAMK ,Annamalai ,Anbumani ,Baja ,Lok Sabha ,Tamil Nadu ,BJP ,BMC ,Rama Dass ,BJP.… ,2026 Legislative Assembly Election ,
× RELATED மந்த கதியில் நடைபெற்று வரும்...