×
Saravana Stores

எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார் கொலை கேவலமாக பேசியதால் தீர்த்துக்கட்டினேன்

*கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம்

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மருமகன், ‘‘தன்னை கேவலமாக பேசியதால் தீர்த்துக்கட்டினேன்’’ என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்தவர் துரை (57). நில புரோக்கரான இவர். கடந்த ஏப்.2ம் தேதி மாலை எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் சென்ற போது, வாகனம் மோதி உயிரிழந்தார்.

எட்டயபுரம் போலீசார், துரை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், எட்டயபுரம் அருகே தோள்மலைப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (43) என்பவருக்கு சொந்தமான லாரியை கொண்டு கயத்தாறு பன்னீர்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சிவராம் (21) என்பவர் விபத்து நடந்தது போல், பைக் மீது மோதச் செய்து துரையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இதற்கு மூல காரணமாக இருந்த துரையின் மருமகன் உடையார் என்ற உதயகுமார் ராஜா மற்றும் லாரி உரிமையாளர் நாகராஜ், டிரைவர் சிவராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான உடையார் என்ற உதயகுமார் ராஜா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனது மாமனாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மகளை நான் திருமணம் செய்து மாமனார் வீட்டு பக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியிருந்து வந்தேன். மாமனாரும், நானும் நில புரோக்கர் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தோம். இதுசம்பந்தமாக எனக்கும், மாமனாருக்கும் தகராறு இருந்து வந்தது.

சமீபத்தில் மாமனார், புதிய கார் வாங்கினார். நான் அதற்கு அவரிடம், இப்போ எதற்கு நீங்கள் இந்த காரை வாங்குகிறீர்கள்?’’, யாருக்காக இதை கொடுக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் நான் யாருக்கு பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறேன். யாருக்கு உதவி செய்யாமல் இருந்திருக்கிறேன். கேட்டவர்கள் எல்லாருக்கும் தானே உதவி செய்கிறேன்.

நீங்கள் கூட என் வீட்டு சாப்பாட்டைத்தானே சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார். அதாவது என்னை ஓசி சோறு என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று நினைத்து மருகிக்கொண்டிருந்தேன். நான் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவன். ஜமீன் பரம்பரையான என்னை கேவலமாக பேசிவிட்டாரே என்று வேதனைப்பட்டேன். ஆனால் அதன் பிறகும் மாமனார் என்னிடம் பழகுவதில், பேசுவதில் சகஜமாகத் தான் இருந்தார். இருப்பினும் என்னால் அவர் பேசியதை தாங்க முடியவில்லை.

எனவே அவரின் கை, கால்களை முறித்து பாடம் புகட்ட எண்ணினேன். இதற்காக கயத்தாறு, பன்னீர்குளத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜை அணுகினேன். அவர் தன்னுடைய டிரைவர் சிவராம் மூலம் லாரியை மோதச் செய்து காயப்படுத்த சம்மதித்தார். இதற்காக எனக்கு ஒருவர் பணம் தர வேண்டும் என்றும், பணத்தை வாங்கி வருமாறும் மாமனாரிடம் கூறி, அவரை எட்டயபுரத்திற்கு பைக்கில் அனுப்பினேன்.

அதன்படி கடந்த ஏப்.2ம் தேதி மாலை குமாரகிரி அருகே மாமனார் துரை பைக்கில் செல்லும் போது சிவராம் லாரியை பைக் மீது மோதினார். மாமனார் காயத்துடன் தப்பி விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டார். போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கைதான 3 பேரும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

வழக்கமாக விபத்து வழக்கை உறவினர்கள் யாராவது சந்தேகம் தெரிவித்தால் மட்டுமே போலீசார் தீவிரமாக விசாரிப்பது வழக்கம். இந்த வழக்கில் உறவினர்கள் யாரும் சந்தேகம் எழுப்பாத நிலையில், தேர்தல் பரபரப்பிலும் தீவிரமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்த எட்டயபுரம் போலீசாருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார் கொலை கேவலமாக பேசியதால் தீர்த்துக்கட்டினேன் appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Durai ,Kovilpatti Vinayaka ,
× RELATED தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அமோக...