×
Saravana Stores

பொம்பள சோக்கை விட மிக மோசமான சோக்கு பாஜவில் கூட்டணி வைப்பது: பங்கப்படுத்திய விந்தியா

காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, திரைப்பட நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் மற்றும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனார். அப்போது அவர் பேசியதாவது: பாஜவில் கூட்டணி வைக்க, எங்களுக்கு சீட் எவ்வளவுனு சரத்குமார் கேட்டார். அதுக்கு அண்ணாமலை, உங்க கட்சி எவ்வளவுனு கேட்டார். உடனே டக்னு தன் கட்சியை கலைத்து பாஜவில் சேர்ந்துவிட்டார் சரத்குமார். அதுக்கான விழா எல்லாம் எடுத்து மெல்லமா வொய்ப் ராதிகாவையும் கூப்டுட்டு அண்ணாமலையை பாக்க போயிருக்கார் சரத்குமார். கட்சியே திரண்டு வரும்னு சொன்னீங்க.. எங்க உங்க கட்சினு அண்ணாமலை பதறிப்போய் கேட்டார். அதுக்கு சரத்குமார், நாங்க ரெண்டு பேரு தான் கட்சினு சொல்லியிருக்கார்.

பொம்பள சோக்கை விட மிக மோசமான சோக்கு பாஜவில் கூட்டணி வைப்பது, அன்புமணிக்கு மனைவியை எம்பியாக்குவது ஆசை. அதனால் கட்சியை காவு கொடுத்துவிட்டு, பாஜவில் அடகு வைத்துவிட்டார். டிடிவி.தினகரன் தனக்கு ஒரு சீட்டு போதும் என்று கதறி இருக்கிறார். அதுவே நான் தாங்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் தலையில் 2 சீட்டுகளை அள்ளிக் கொடுத்துட்டாங்க. இதாச்சும் பரவாயில்ல.. ஓபிஎஸ்சுக்கு ஒரு சீட்டு கூட கொடுக்காம அசிங்கப்படுத்திட்டாங்க. சீட்டு பத்தி பேசுறதுக்காக அண்ணாமலை வீட்டுக்கு ஓபிஎஸ் அடிக்கடி போனதால, இப்ப அண்ணாமலை வீட்டு ரேஷன் கார்டில ஓபிஎஸ் பேர சேத்துவிட்டிருக்கார். இவ்வாறு விந்தியா பேசினார். பிரசாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* தலைமை சரியில்ல… தொண்டனை மதிக்குறது இல்ல… அதிமுகவிலிருந்து நடிகை ஜெயதேவி விலகினார்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் ஜெயதேவி அதிமுகவில் இருந்து அவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: என்னை நட்சத்திர பேச்சாளரா நியமிச்சது ஜெயலலிதா தான். ஆனா அதிமுகல இப்போ பழைய ஆளுகளுக்கு மரியாதை இல்ல. பேச்சாளர்களை சுத்தமா மதிக்கிறது இல்ல. சரியான தலைமையும் இல்ல. இபிஎஸ்சை பாக்கவே முடியறது இல்ல. தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்ல. இதனால நான் மனம் நொந்து போய் இங்க வந்திருக்கேன். கட்சியில என் பொறுப்பை நான் ராஜினாமா செய்றேன், கட்சியில இருந்தும் விலகுறேன் என்றார்.

* நூறு ரூபாயின் மதிப்பை 60 ரூபாய்க்கு சரித்தவர்: இது தான் மோடியின் டாலர் புரட்சி; அம்பலப்படுத்துகிறார் காங். தலைவர்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய பொருளாதாரத்தை 2024ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்தி இந்தியாவை பொருளாதார நாடாக மாற்றப் போவதாக மோடி முழங்கினார். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 2014ல் ரூபாய் 54.78 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு தற்போது 2024ல் மோடியின் ஆட்சியில் ரூ.83.59 ஆக கடுமையாக சரிந்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒருவரிடம் ரூ.100 இருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ.60 மட்டும் தான். இதுதான் மோடியின் டாலர் புரட்சி.

வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் 2023ம் நிதியாண்டில் மொத்த தொகை ரூ.14 லட்சத்து 42 ஆயிரம் கோடி. ஆனால், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மறைமுக வரி வசூல் ரூ.29 லட்சத்து 8 ஆயிரம் கோடி. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மறைமுக வரி என்பது நேரடியாக மக்களை பாதிக்கிற வரியாகும். மொத்த ஜி.எஸ்.டி. வரி வசூலில் 64 சதவிகிதம் 50 சதவிகித அடித்தட்டு மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால், 10 சதவிகிதம் உள்ள பெரும் பணக்காரர்களிடமிருந்து வெறும் 3 சதவிகித ஜி.எஸ்.டி. மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பது எவ்வளவு கொடுமை என்பதை புரிந்து கொள்ள முடியும். 2014ம் ஆண்டிற்கு முன்பு ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் இருந்த கடன் ரூ.43ஆயிரம். இப்போது 2024ல் மோடியின் ஆட்சியில் இந்த கடன் ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.

எனவே, கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்னைகளை திசைத் திருப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பா.ஜ.வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள். மிகப்பெரிய பொருளாதார பேரழிவிற்கு வித்திட்ட பிரதமர் மோடியின் ஆட்சியால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் விமோசனம் காண பாசிச, சர்வாதிகார பா.ஜ. ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலமே சர்வாதிகாரம் வீழ்த்தப்படும், ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

* பாமக வேட்பாளர் லேட்: ரோட்டோரம் கால்கடுக்க காத்திருந்த மாஜி எம்எல்ஏக்கள்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடும் ஜோதி வெங்கடேசன் நேற்று திருப்போரூர் ஒன்றியத்தில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொகுதி எல்லையான மேலக்கோட்டையூரில் காலை 7.30 மணிக்கு பிரசாரம் தொடங்கி நடைபெறும் என்றதால், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோதண்டபாணி வந்திருந்தனர். சுமார் 2 மணி நேரமாக வேட்பாளர் வராததால் வெறுத்துபோய் சாலையிலேயே காத்திருந்தனர். பின்னர், அவரை போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, வந்துகொண்டு இருப்பதாக கூறினர். இதையடுத்து, 10 மணிக்கு வேட்பாளர் வந்தவுடன் அங்கிருந்த அம்மன் கோயிலில் இருந்து பிரசாரம் தொடங்கப்பட்டது. மிகக் குறைவான அளவிலே கட்சி நிர்வாகிகள் வந்திருந்ததால் மந்தமான நிலையில் சென்ற பிரசார குழுவினர் மாம்பாக்கம், பொன்மார், புதுப்பாக்கம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தனர்.

The post பொம்பள சோக்கை விட மிக மோசமான சோக்கு பாஜவில் கூட்டணி வைப்பது: பங்கப்படுத்திய விந்தியா appeared first on Dinakaran.

Tags : Choku ,BJP ,Pompala ,Vindhya ,AIADMK ,Rajasekhar ,Kanchipuram ,Deputy Secretary ,Vinthia ,Pilliyarpalayam ,Walajabad ,Kanchipuram district ,Pompala Chowk ,Dinakaran ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...