திண்டுக்கல் எம்பி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி நேற்று முன்தினம் திண்டுக்கல் பகுதியில் பேசியதாவது: மோடியின் பாஜ அரசு மகளிர் தினத்தன்று காஸ் விலையை ரூ.100 குறைத்தது. காஸ் விலையை ரூ.1100 வரை ஏற்றியது யார் என கேட்டால் வாய் திறப்பதில்லை. இவரே குண்டு வைப்பாராம். இவரே வந்து எடுப்பாராம் என்ற ரகுவரன் ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம் போல மோடி செயல்படுகிறார். 10 ஆண்டுகளில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் விவசாயிகள் ஒரு வருடம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று துன்புறுத்தினர். ஆனால் அதுகுறித்து எல்லாம் வாய் திறக்காத மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பாதுகாப்பான ஆட்சியை தருவதாக பேசி வருகிறார்.
பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. ஆனாலும் கடந்த காலங்களில் வெற்றியை கொடுத்த அதிமுக, திண்டுக்கல் தொகுதியில் நேரடியாக போட்டியிட முடியவில்லையே ஏன்? அதிமுக தலைவர்கள் தங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி பேசி வாக்கு சேகரிக்க இயலவில்லை. அதனால்தான் கூட்டணி கட்சியின் பின்னே ஒழிந்து கொண்டு அதிமுகவினர் வருகிறார்கள். அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கவில்லை. பாஜ ஆட்சியில் பெண்களும், தலித் பழங்குடி மக்களும், சிறுபான்மையினரும் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள். பாஜ, அதிமுக போன்ற ஏமாற்று பேர்வழிகள் நமக்கு வேண்டாம், நமக்கு, நமது வாழ்க்கை சூழலை எளிமையாக்கி பொருளாதார பிரச்னைகளை சரிசெய்யும் வாக்குறுதிகளை கொடுத்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சி தான் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post காஸ் விலை குறைப்பு நாடகம்: இவரே குண்டு வைப்பாராம்… இவரே வந்து எடுப்பாராம்…: மோடியை கலாய்த்த ரோகிணி appeared first on Dinakaran.