×

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியதாவது , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஓடும் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஐந்தாவது உயிர் ஜெயராமன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Madras ICourt ,Anbumani Ramadoss ,Chennai ,Tamil Nadu government ,Chennai iCourt ,X site ,Vandipalayam village ,Ulundurpet, Kallakurichi district ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...