×

ஆந்திராவில் பென்ஷன் வாங்க சென்றபோது சோகம் கொளுத்தும் வெயிலால் சாலையில் சுருண்டு விழுந்து மூதாட்டி பலி

*இறுதி சடங்கில் அமைச்சர், எதிர்கட்சியினர் மோதல்

திருமலை : பென்ஷன் வாங்க சென்றபோது வெயில் கொடுமை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்து மூதாட்டி இறந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தச்சென்ற அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் நேற்றுமுன்தினம் மாநிலம் முழுவதும் இம்மாதத்திற்கான முதியோர் பென்ஷன் வழங்கப்பட்டது. இதனை பெற சுட்டெரிக்கும் வெயிலில் ஏராளமான முதியோர் அரசு அலுவலங்களை நாடினர். இதேபோல் கிருஷ்ணா மாவட்டம் கங்கூர் கிராமத்தை சேர்ந்த வஜ்ரம்மா(80) என்ற மூதாட்டி, பென்ஷன் வாங்க சென்றார். அப்போது சுட்டெரிக்கும் வெயிலை தாங்காமல் சாலையிலேயே சுருண்டு விழுந்தார்.

இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்களுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த உறவினர்கள் மயங்கி கிடந்த மூதாட்டியை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வஜ்ரம்மா வெயில் கொடுமையால் ஏற்கனவே உயிரிழந்தார் என்றுதெரிவித்தனர். இந்த தகவல் காட்டு தீ போல் பரவியது.
இதையறிந்த ஆந்திர மாநில அமைச்சர் ஜோகிரமேஷ், தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் போடே பிரசாத் ஆகியோர் தங்கள் கட்சியினருடன் ஒரே நேரத்தில் வஜ்ரம்மாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அமைச்சர் கூறுகையில், `வஜ்ரம்மா இறந்ததற்கு காரணம் சந்திரபாபு தொடர்ந்த வழக்குதான்’ என்றார்.

இதனால் அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் `சந்திரபாபு ஒழிக’ என கோஷமிட்டனர். இதைக்கண்ட சந்திரபாபு கட்சியினர் ஆத்திரமடைந்து கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பையும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் வெளியிட்ட அறிக்கையில், `இறுதி அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில்கூட ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. இதுபோன்ற போக்கு கீழ்த்தரமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் பென்ஷன் வாங்க சென்றபோது சோகம் கொளுத்தும் வெயிலால் சாலையில் சுருண்டு விழுந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,TDP ,
× RELATED ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை...