×
Saravana Stores

திம்பம் சீவக்காய் பள்ளம் அருகே யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

சத்தியமங்கலம், ஏப்.5: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தற்போது, வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அடுத்துள்ள சீவக்காய் பள்ளம் அருகே சாலை ஓரத்தில் ஒரு நபர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்த நபரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விசாரணையில் அந்த நபர் யானை தாக்கி இறந்துள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வனப்பகுதி சாலையில் சுற்றித்திரிந்த நபர் எனவும் தெரியவந்தது. இறந்தவரின் பெயர், முகவரி தெரியாததால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திம்பம் சீவக்காய் பள்ளம் அருகே யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thimpam Sivakai pit ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Sathyamangalam- ,Mysore National Highway ,Tamil Nadu-Karnataka ,
× RELATED போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு