×
Saravana Stores

நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது; சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் ஆனால் இன்னும் செய்யவில்லை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேச்சு

சென்னை: நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் ஆனால் அதனை இன்னும் செய்யவில்லை என தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு 11வது நாளான இன்று தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் 136வது வட்டம், 136அ வட்டத்தில் உள்ள ராணி அண்ணா நகர், கன்னிகாபுரம், விஜயராகவபுரம், சத்யாகார்டன், பரணி காலனி, ராஜமன்னார் சாலை, பொப்பிலிராஜா சாலை, ஆற்காடு ரோடு, சிவலிங்கபுரம், எல்ஐசி குடியிருப்பு, சிபிடபள்யூடி குடியிருப்பு, டபுள்டேங் காலனி, லட்சுமணசாமி சாலை, அழகிரிசாமி சாலை, அண்ணா மெயின் ரோடு, ராமசாமி சாலை, ஆர்கே சண்முகம் சாலை, பி.டி.ராஜன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து மலர் தூவி வரவேற்றனர். இதில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா, 136வது வார்டு கவுன்சிலர் நிலவரசி, கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், கட்சியின் உறுப்பினர்களும் வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது : நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். அதனை இன்னும் செய்யவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் அதையும் செய்யவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். அதையும் செய்யவில்லை. வேளச்சேரி பகுதியைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமெனக் கூறினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் பள்ளிக்கரணை குறித்து அதிகம் தெரிந்தவராக இருக்கட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி அனுமதி வாங்கி உள்ளோம். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்ட் நிதியுதவியுடன் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது; சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் ஆனால் இன்னும் செய்யவில்லை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Parliament ,DMK ,Tamilachi Thangapandian ,CHENNAI ,South Chennai ,Constituency ,Tamil Nadu ,
× RELATED ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி...