×

கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகளில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்..!!

சென்னை: கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகளில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் அரசியல் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க ஆயர்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்தவ பள்ளி வளாகங்களில் அனைத்து மத பிரார்த்தனை அரங்கு ஒன்றை அமைக்கவும் ஆயர்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், 7 பல்கலைக்கழகங்களை கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் 450 தொழில் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 5 மருத்துவக் கல்லூரிகளையும் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நீண்ட மடல் ஒன்றை ஆயர்கள் அமைப்பு அனுப்பியுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலால் புதிய சவால்கள் – ஆயர்கள்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல், சமூக கலாச்சார மற்றும் சமயச் சூழல்களால் புதிய சவால்கள் எழுந்துள்ளதாக ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல ஆலோசனைகளை ஆயர்கள் அமைப்பு வழங்கியுள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவ நடைமுறைகளை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என ஆயர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், புலவர்கள், தேசிய தலைவர்களின் படங்களை பள்ளியில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஆயர்கள் அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.

The post கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகளில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Christian ,Dinakaran ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்