×
Saravana Stores

மீனின் வயிற்றில் அவதாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் அருகே வடக்குப் பொய்கை நல்லூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. நாகப்பட்டினம், கடற்கரையை ஒட்டிய இடமாகும். ஒரு சமயம் இந்த கடற்கரைக்கு சிவபெருமான் உமையவளுடன் எழுந்தருளிய அருள் பாலித்த புண்ணியத் திருத்தலமாகும். குளிர்ந்த தென்றல் காற்று வீச, கடல் அலைகள் `ஓம்.. ஓம்.. ஓம்..’ என்று நாத சங்கீதத்தை ஒலித்து கடற்கரை மணலைத் தொட்டு மீண்டும் சென்றது. இக்காட்சியைக் கண்ட உமையவள், சிவபெருமானை நோக்கி கடற்கரை அலைகள் மோதுவதில் பிரபஞ்ச ரகசியம் புதைந்து உள்ளதா? என்று கேள்விதனை எழுப்பினார். சிவபெருமான் புன்னகை பூத்து, உலகம் அனைத்துக்கும் உயிர் சக்தியாக விளங்குபவளே! மனிதனுடைய ஆசைதான் இந்த கடலலை மீண்டும் மீண்டும் கரையைத் தொட்டுவிட்டு செல்கின்றது.

உலகப் பற்றை விடாமல் சம்சார பந்தத்தில் மோகித்து, அதிலே உழன்று ஈடுபட்டு இருந்தால், முக்தி கிடைக்குமா? மனிதனுக்கு பிரபஞ்சத்தின் மீது ஓர் ஈர்ப்புஉண்டு. ஆகையால், இவர்கள் உண்மையான வாழ்க்கை எது என அறியாமல் தடுமாறுகின்றனர். நாத சைவத்தின் சிவதத்துவக் கோட்பாடு சித்தாந்தத்தை விளக்கி கூறிக்கொண்டே வந்தார். வாழும் போதே ஜீவன் முக்தி அடைந்தால், அது “ஹடயோகம்’’ சமாதி நிலையாகும். நீர்க்குமிழி போல சிவன் – ஜீவன் இடையே உள்ள தொடர்புதான் சித்த சித்தாந்த கோட்பாடுகள் என்று தாரக மந்திரத்தை உமையவளுக்கு எடுத்துக் கூறிக் கொண்டே வந்தார்.

உமையவளும், சலிக்காமல் தன் குழந்தைகள் மாயையில் இருந்து விடுபட்டு உன்னத இடத்தைப் பெற வேண்டி கருத்தை ஊன்றி கேட்டுக் மெய் மறந்து உபதேசத்தை ஏற்றுக் கொண்டார். காற்று அசைந்து உடலை வருடிச் சென்றதும், அந்த ஈரப்பதம் உள்ளத்தில் ஒருவித சிலுசிலுப்பை ஏற்படுத்தியது. தன்னையும் அறியாமல் உமையவள் கண்ணை அசந்து உறக்கம்கொண்டார். அக்கணம், சிவபெருமான் தொடர்ந்து தேவரகசிய, ஞானரகசியம் விளக்கிக் கொண்டே வந்தார்.

அக்கணம், கடல் அலைகளில் நடுவில் ஓடிய ஒரு தாய் மீன் சிவபெருமானின் உள்ளார்ந்த சிவஞான தத்துவத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தது. மீனுக்கு செவி உண்டா? என்ற கேள்வி எழுப்பினால், மீனுக்கு செவி உண்டு. காது மடல்தான் இல்லை. எனவே, சிவபெருமான் கூறிய தத்துவத்தைக் கேட்டபடியே நின்றது. இரண்யகசிபு தவம் செய்ய காட்டிற்கு சென்றான். அவன் மனைவி நீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள். அவளைக் காண நாரத முனிவர், பூவுலகில் சஞ்சாரம் செய்து, நீலாவதிக்கு திருமாலின் அவதாரத்தின் பெருமையைக் காருண்ய குணத்தை விளக்கிக் கூறினார். அதை கேட்டுக் கொண்டே வந்த நீலாவதி, தம்மையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள். ஆனால், கர்ப்பத்தில் இருந்த சிசு, நாரதர் உரைத்த விஷ்ணுவின் தாரக மந்திரத்தைக் கேட்டபடியே உலகில் மண்ணில் விழுந்தது. அக்குழந்தைதான் பிரகலாதன்.

அவ்வாறே கடலில் இருந்த தாய்மீனும் சிவனின் நெறிகளை கேட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக, கடலில் மீன் பட்சிகள் இவையாவும் யாருடைய சாபத்தினால் பூமியில் பிறவி எடுக்கின்றன. அதேபோல், பறவைகள், மரங்கள், நீர் நிலையில் வாழும் உயிரினங்களாக வடிவம் பெற்று சாபம் நீங்கும் வரை வாழ்ந்து வரும் தேவலோகத்துத் தேவர்களும், தேவதைகளும் ஆவர். சிவபெருமானின் தெய்வீகக் கூற்றைக் கேட்ட இம்மீனும், சிவ தத்துவத்தைக் கேட்டு நற்கதி அடைந்தது.

வயிற்றில் இருந்த மீன் முட்டை பொரித்தது. மீன் குஞ்சாக நீந்திய அக்கணமே பாலகனாக மனித வடிவம் எடுத்து சிவபெருமானின் திருவடியில் பற்றியது. தாய் மீனும் தேவலோகத்து தேவதையாக, பெண் உருவம் எடுத்து சிவபெருமானை நாடி தாளினை பற்றி பாபவிமோர்சனம் அடைந்தது. பெண்ணாக மாறியவள் மகிழ்ந்து வானுலகம் சென்றாள். அக்குழந்தை, சிவனின் ஞானநெறியை கேட்டது. சிவஞான தத்துவத்தை செவி சாய்த்ததால், அக்குழந்தைக்கு மச்சேந்திரன், மச்சமுனி என்ற சிறப்பு பெயரை இட்டு அருளாசி கொடுத்து சிவபெருமானும் உமையவளும் மறைந்தார். சிவ அம்சமாக பிறந்த மச்சேந்திரன் இயற்கையிலேயே ஞானநெறியை அறிந்திருந்தால், இயற்கையாகவே தவம் செய்யும் ஆற்றலை பெற்றிருந்தார்.

அத்துடன் யோக கலைகள் அனைத்தையும் கற்று யோகியாக திரிந்தார். அஷ்டமா சித்துக்களை தவமிருந்து பெற்றார். மச்சேந்திரனுக்கு திடீர் என்று யோகம் செய்ய விரும்பாமல், நன்கு புசித்து உடலை வளர்த்து உயிர் வாழவேண்டும் என்று தோன்றியது. அத்தோன்றலுக்கு காரணம் யாது என நாம் சிந்தித்துப் பார்த்தோம் என்றால், அரிய செயலாக புதிய உயிரை உலகுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்றால் அதற்காக சிலதை விட்டுக் கொடுக்க வேண்டும். அதுதான் உலக தர்மம்.

அவ்வாறுதான், மச்சேந்திரனும் முடிவு செய்தார். தவநிலையில் இருந்து சற்று விலகி, வீடுவீடாக சென்று பிச்சை எடுத்து புசித்து வந்தார். அப்படி ஒரு நாள் அவர் ஒரு வீட்டிற்கு சென்று உள்ளே இருந்த பெண்மணியை தாயே என அழைத்து, “பிட்ஷாம் தேஹி’’ என்று கூறியதும், வீட்டின் உள்ளே இருந்த பெண்ணானவள் வெளியே வந்து மச்சேந்திரருக்கு திருவோட்டில் உணவை வைத்துவிட்டு திரும்பிச் சென்றாள். அவள் செயலைக் கண்ட மச்சேந்திரமுனி, “தாயே பிச்சை இட்டவள் என்னை சுற்றிச் வணங்கி செல்ல வேண்டும். இதுதான் மரபு’’ என்று கூறினார். அதைக் கேட்டு சினமடைந்தவள், மன உளைச்சலும் வேதனையிலும் உள்ளம் கொதித்திருந்தாள்.

“நீர் என்ன பிச்சை கேட்கத் தானே வந்தீர், பிச்சை போட்டுவிட்டேன். பெற்றுக்கொண்டு செல்லும்’’ என்று அதிகார தோரணையில் கூறியதும், “பெண்ணே அது முறையாகாது. நீ என்னை சுற்றி வந்து வணங்க வேண்டும். நான் உனக்கு ஏதாவது தரவேண்டும்’’ என்று கூறினார். “நீர் என்ன கடவுளா? உம்மை வணங்க?’’ என்று படக்கென கேள்வி கேட்டாள். மச்சேந்திரர் சிரித்துக் கொண்டே “கடவுளும், சித்தரும் ஒன்றே. உன்னுடைய மனக்குறை எது என்று நீ கூறினால் நான் அதை தீர்த்து வைப்பேன்’’ என்றார். “ஓ… அப்படியா நீர் கடவுள் என்று கூறுகிறீர். சரி என்னுடைய மனக்குறை என்ன தெரியுமா? அதை நீக்க உம்மால் முடியுமா?’’ என்றாள்.

“பெண்ணே! அதைத்தான் கூறு என்று கேட்டேனே’’ என்று கூறியதும். “நான் குழந்தைப் பேறு இல்லாதவள். அம்மா என்று அழைத்துப் பெருமைப் படக்கூடிய நிலையை இழந்தவள். ஊரார் என்னை ஏசும்படி வாழும் ஒரு பாவாத்மா’’ என்று கூறி அழுதாள். “அந்தக் குழந்தைச் செல்வத்தை உம்மால் தர இயலுமா?’’ என்று மச்சேந்திரரை ஏளனமாக நோக்கி, “உம்முடைய சக்தியினால் உன் கடவுள் மனதுவைத்தால் பிள்ளை வரம் தர இயலுமா?’’ என்று கேட்டாள்.

“என்ன பெரிய விந்தை. நீ கேட்டபடியே உனக்கு ஒரு பாலகன் பிறப்பான். இந்தா.. இந்த திருநீற்றை நீரில் கலந்து குடித்தால், நிச்சயம் நீ தாய்மை அடைவாய். நானும் இன்னும் சில வருடங்கள் கழித்து வந்து பார்க்கிறேன்’’ என்று கூறி. சிரித்தவாறு விபூதியை தந்து உன் பிரச்னை தீர்ந்தது எனக் கூறி அவர் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

இங்கு நடைபெற்ற செயல்கள் அத்தனையும் சற்று தள்ளி நின்றிருந்து கவனித்தாள் ஒரு பெண்மணி, அவள் கையில் இருந்த திருநீற்றைப் பார்த்து, “எதற்காக அவர் இந்த திருநீற்றைக் கொடுத்தார்?’’ என கேள்வி கேட்டாள். அவளும் நடந்தவற்றை அப்படியே கூறினாள். “அவர் இந்த விபூதியை நீரில் கலந்து குடித்தால், குழந்தை பிறக்கும் என்ற வரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் நீரில் கரைத்து குடிக்கப் போகிறேன்’’ என்றாள்.உடனே அந்த பெண், “அடியே உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? வந்தவன் யார் என்று தெரியுமா? வந்தவன் ஒரு மாயாவியாகக் கூட இருக்கலாம். ராவணன்கூட மாய வேடத்தில் வந்துதான் சீதையை சிறைபிடித்துச் சென்றான். அவ்வாறு இவரும் விபூதியை தூவிவிட்டு உன்னை மயக்கி அழைத்துச் சென்றால் என்ன செய்வாய்? இதெல்லாம் நமக்குத் தேவையா என்ன?என்று கூறியதும், அதற்கு பயந்து இந்த விபூதியை என்ன செய்ய? என்று கேட்டாள்.

“அதோ அந்த கோசாலையில் இருக்கக்கூடிய கோவனத்தில் இதை போடு. அந்த எரு மூட்டைகளோடு இதை கொட்டு’’ எனக் கூறியதும், அந்த அடுப்பிலே போட்டுவிட்டு அவள் சென்றுவிட்டாள். ஆண்டுகள் உருண்டு ஓடின. ஒரு நாள் மச்சேந்திர் அதே வீட்டில் நின்று, “தாயே கொஞ்சம் வெளியே வருக’’ என்று அழைத்தார். அவளும் உணவுக்காகத்தான் வந்திருக்கிறார் என நினைத்து தட்டில் சோற்றுடன் வந்து நின்றாள். “பெண்ணே நான் யாரென்று தெரிகின்றதா?’’ என்று கேட்டதும் அவள் திகைத்து, “நீங்கள்’’…… என்று வாயைப் பிளந்தாள்.

“ஆம். சில ஆண்டுகளுக்கு முன் விபூதியை கொடுத்து பாலகன் பிறப்பான் என்றேனே! அந்த பாலகனை பார்க்க வேண்டும். வரச்சொல்’’ என்று கேட்டார். தன் அறியாமையால் தவறு செய்துவிட்டதை உணர்ந்த அந்தப் பெண்மணி, “சுவாமி நான் தவறிழைத்துவிட்டேன். நான் விபூதியை உட்கொள்ளவில்லை. பாலகனும் பிறக்கவில்லை’’ என்று கூறினாள். சினம் அடைந்த மச்சேந்திரர் “சிவனின் சக்தியால் பிறக்க வேண்டிய பாலகனை நீ சுமக்கவில்லையா? என்ன செய்தாய் அந்த விபூதியை?’’ என்று கேட்டதும், கோசாலையில் எரு மூட்டைகள் உள்ள சாம்பலில் போட்டுவிட்டேன் என்று அச்சத்துடன் கூறினாள்.

எங்கே அந்த இடம் என்று கேட்டு அவளை அழைத்துச் சென்றார். கோவனத்திலே சாம்பல் கொட்டிக் கிடக்க. அதன் உள்ளே புதைந்திருப்பதை அறிந்து கொண்டு, “கோவதனே! கோரகனே! கோ இரக்கனை! சிவமுனி அழைக்கிறேன் எழுந்து வா’’ என்று அழைத்ததும், அன்றில் இருந்து இன்று வரை குழந்தை எப்படி வளர்ச்சி அடைந்திருக்குமோ அந்த வளர்ச்சியோடு கார்த்திகை அவிட்ட நட்சத்திரத்தில் அந்த சாம்பலை தள்ளிக்கொண்டு பத்து வயது பாலகன் எழுந்து வந்தான். அவர்தான் “கோரக்கன்’’.

அந்தப் பெண்ணை பார்த்து, “உன் வயிற்றில் இக்குழந்தை பிறப்பதற்கு இடமில்லாமல் உன்னுடைய கர்மா தடுத்துவிட்டது. ஆனால் இந்த சாம்பல் கோசாலையானது பசுவின் சாணத்திலே புண்ணியம் செய்திருப்பதினால், இவன் பிறந்திருக்கிறான். எப்பொழுதும் பொறுமையாகவும், பசுவைப் போன்று அமைதியாகவும், மற்றவருக்கு உதவக் கூடிய தன்மை உடையவனாகவும் இருப்பான். இன்று முதல் இவனை கோரக்கர் (பசுவின் சாம்பலில் இருந்து பிறந்தவன் என்பது பொருள்) என்று அழைப்பார்கள்’’ என்றுகூறி அந்த சாம்பலில் இருந்து பிறந்தவனுக்கு பெயரிட்டார் மச்சேந்திர முனி.

பொன்முகரியன்

The post மீனின் வயிற்றில் அவதாரம் appeared first on Dinakaran.

Tags : Incarnate ,Nagapattinam ,North Poikai Nallur ,Lord Shiva ,Umaiyavala ,Dinakaran ,
× RELATED சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக்...