- பிரதமர் மோடி
- நிர்மலா சீதாராமன்
- ஜனாதிபதி
- தமிழ்நாடு காங்கிரஸ்
- நரேந்திர மோடி
- கச்சத்தீவு
- தமிழர்கள்
- காங்
- கதம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை; தமிழர்களுடைய உரிமைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கச்சத்தீவு பிரச்னை குறித்து நரேந்திர மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கை தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே, அதற்கு மோடியும், நிர்மலா சீதாராமனும் சிறந்த உதாரணம். ஒரு மாநிலத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிற பிரதமர் மோடியை எவருமே மன்னிக்க மாட்டார்கள்.
சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை எனக் கூறி நற்சான்றிதழ் வாங்கியதை தேசபக்தியுள்ள எந்த இந்தியரும் ஏற்க மாட்டார்கள். இந்நிலையில், சீன நாடு நான்காவது முறையாக அருணாசல பிரதேச பகுதியில் 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடி, கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படத் தயங்க மாட்டார் என்பது அம்பலமாகியிருக்கிறது.
நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியைப் பற்றி கவலைப்படுகிறார். நிதியமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன், வங்கிகளில் ரூ.53,000 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களை 10 ஆண்டுகளில் மீட்டெடுக்க நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்தது ? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர். கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனில் 2014 முதல் 2023 வரை வாராக் கடன் ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதில் தள்ளுபடி செய்யப்பட்டது ரூ.14 லட்சத்து 56 ஆயிரம் கோடி. இந்த தொகையில் பெரும் தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது 50 சதவிகிதம்.
இதன்மூலம் நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சகத்தை தொழிலதிபர்களுக்காகத்தான் பயன்படுத்தினார் என்பதை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? எனவே, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், 20 ஆயிரம் புத்தகங்களை படித்த அறிவு ஜீவி என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிற அண்ணாமலை ஆகியோரின் ஆதாரமற்ற அவதூறான கோயபல்ஸ் பிரசாரத்தினால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
* அமைச்சர் காரில் சோதனை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லால்புரம் கிராமத்தில் வரும் 6ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மேடை அமைக்கும் பணியை பார்ப்பதற்காக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று சிதம்பரம் நகரில் இருந்து புறவழிச்சாலை வழியாக காரில் சென்றார். அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் கீழே பறக்கும்படை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதை தொடர்ந்து காரை அனுப்பி வைத்தனர்.
The post பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் கோயபல்ஸ் பிரச்சாரத்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள்: காங். தலைவர் காட்டம் appeared first on Dinakaran.