×

ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசியல் பிரபலங்கள் கைது, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 25 அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்த பின்னர், அவர்கள் மீதான ஊழல் வழக்குகள் நீர்த்து போயியுள்ளன. அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

துணை முதல்வரான அஜித் பவார்
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விவகாரம் தொடர்பாக கடந்த 2019ல் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், அப்போதைய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித் பவார், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. ெதாடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் காங்கிரஸ் தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், திலீப்ராவ் தேஷ்முக், மறைந்த மதன் பாட்டீல் ஆகியோரின் பெயரையும் சேர்தது. அதேபோல் சிவசேனாவை சேர்ந்த ஆனந்தராவ் அட்சுல் பெயரும் சேர்க்கப்பட்டது.

* ஆகஸ்ட் 2019 – மும்பை பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு
* செப்டம்பர் 2019 – எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது
* அக்டோபர் 2020 – பொருளாதார குற்றப்பிரிவு வழக்கை முடித்து வைக்கிறது. அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து சவால் செய்கிறது
* ஏப்ரல் 2022 – அஜித்பவாரின் பெயரை குறிப்பிடாமல் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது
* ஜூன் 2022 – சிவசேனா பிரிந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு பாஜகவுடன் இணைந்து புதியதாக ஆட்சியை அமைத்தது
* அக்டோபர் 2022 – மும்பை பொருளாதார குற்றப்பிரிவானது, அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மீண்டும் விசாரணையை ெதாடங்குகிறது
* ஜூலை 2023 – அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார்

* ஜனவரி 2024 – மும்பை பொருளாதார குற்றப்பிரிவு இரண்டாவது முறையாக வழக்கை முடித்து வைக்கிறது
தற்போதைய நிலை – பொருளாதார குற்றப்பிரிவின் முடிவு தொடர்பாக அமலாக்கத்துறை தலையீட்டு புதிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது

பிரபுல் படேல் மீதான வழக்கு மூடல்
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான பிரபுல் படேல், ஏர் – இந்தியா விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குபதிந்து விசாரணை நடத்தியது. அந்த எப்.ஐ.ஆர்களில் பிரபுல் படேலை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பெயரை குறிப்பிடுகின்றனர்.

* மே 2017 – ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது
* மே 2019 – அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் பிரபுல் படேலின் பெயரைக் குறிப்பிட்டது
* ஜூன் 2023 – பிரபுல் படேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்
* மார்ச் 2024 – பிரபு படேல் மீதான குற்றச்சாட்டை சிபிஐ வாபஸ் பெற்றது
* தற்போதைய நிலை: நீதிமன்றத்திலும் வழக்கு முடித்து வைக்கும் நிலுவையில் உள்ளது

விடுவிக்கப்பட்ட பிரதாப் சர்நாயக்
சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரதாப் சர்நாயக், பாதுகாப்பு நிறுவனத்துடனான பணப்பரிவர்த்தனையில் சிக்கினார். அவர் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. கடந்த 2021 ஜூனில் தன்னை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாக கூறி, அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். பின்னர் ஜூன் 2022ல், சிவசேனா பிளவுபட்டதால் அவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்தார். நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்டில் நடந்த மோசடி வழக்கிலும் சர்நாயக்கிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

* நவம்பர் 2020 – மும்பை பொருளாதார குற்றப்பிரிவின் அடிப்படையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது
* ஜனவரி 2021 – பொருளாதார குற்றப்பிரிவு வழக்கை முடித்து வைத்தது
* ஜூன் 2022 – சர்நாயக் ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்தார்
* செப்டம்பர் 2022 – முடித்து வைக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது
* தற்போதைய நிலை: மேற்கொண்டு சர்நாயக் மீது நடவடிக்கை இல்லை; ஆனால் மற்றொரு வழக்கு விசாரணையில் உள்ளது

முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா
காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்த தற்போதைய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது, கடந்த 2014 மற்றும் 2015ல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குபதிந்து விசாரணை நடத்தியது. சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதீப்தா சென்னுடன், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 2014ல் அவரது வீடு மற்றும் அலுவலகத்தை சிபிஐ சோதனை செய்து, அவரிடம் விசாரணை நடத்தியது. லூயிஸ் பெர்கர் வழக்கில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

* ஆகஸ்ட் 2014 – ஹிமந்த பிஸ்வா சர்மாவின் வீட்டில் சிபிஐ சோதனை
* நவம்பர் 2014 – சிபிஐ விசாரணை
*ஆகஸ்ட் 2015 – பாஜகவில் இணைந்தார்
* தற்போதைய நிலை: வழக்கு விசாரணையில் உள்ளது; ஆனால் நடவடிக்கை இல்லை

ஹசன் முஷ்ரிப்
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள சர் சேனாபதி சாந்தாஜி கோர்படே சர்க்கரை ஆலையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஹசன் முஷ்ரிப் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட சேகரிக்கப்பட்ட பணத்தை ஹசன் முஷ்ரிப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தொடர்புடைய ஷெல் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

* பிப்ரவரி-மார்ச் 2023 – ஹசன் முஷ்ரிப்பின் வளாகத்தில் மூன்று முறை அமலாக்கத்துறை சோதனை
* ஜூலை 2023 – ஹசன் முஷ்ரிப், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்
* தற்போதைய நிலை: வழக்கு நடைபெறுகிறது. ஆனால் ரெய்டுகளோ நடவடிக்கைகளோ இல்லை

பாவனா கவாலி
அறக்கட்டளை நிதியில் முறைகேடு நடந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிவசேனா மூத்த தலைவரான பாவனா கவாலி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. அறக்கட்டளையில் இருந்து 17 கோடி ரூபாய் வரை நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டது. அவரது உதவியாளர் சயீத் கானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.3.75 கோடி மதிப்புள்ள மும்பை கட்டிடத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
* ஆகஸ்ட் 2021 – பாவனா கவாலியின் வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
* செப்டம்பர் 2021 – பாவனா கவாலியின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்தது
* நவம்பர் 2021 – அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது
* ஜூன் 2022 – ஏக்நாத் ஷிண்டே அணியில் பாவனா கவாலி இணைந்தார்
* தற்போதைய நிலை – கூடுதல் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

சி.எம்.ரமேஷ்
கடந்த 2018 அக்டோபரில் அப்போதைய தெலுங்குதேசம் எம்பியான இவரது நிறுவனங்களில் ரூ.100 கோடி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஐடி ரெய்டு நடந்தது. இதையடுத்து இவரைத் தகுதி நீக்கம் செய்ய பாஜ எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்குக் கடிதம் எழுதினார்.
* 2018 அக்டோபர்: சி.எம்.ரமேஷ் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.
* 2019: பாஜவில் இணைந்தார்.
* தற்போதைய நிலை: இதன்பிறகு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ரனீந்தர் சிங்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் மகனான இவர் மீது, அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. 2016ல் இவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். 2018 மார்ச்சில் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங்கிடம் சிம்பவுலி சுகர்ஸ் நிறுவனத்தில் ₹98 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திது. இந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளராக குர்பால் சிங் இருந்தார். சிபிஐ எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை பண பரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து இவரது ரூ.110 கோடி மதிப்பிலான மில் சொத்துக்களை 2019 ஜூலையில் முடக்கியது.
* 2020 நவம்பர்: ரனீந்தரிடம் அமலாக்கத்துறை விசாரணை.
* 2021 நவம்பர்: காங்கிரசில் இருந்து விலகினார் அம்ரீந்தர் சிங்.
* 2022 செப்டம்பர்: பாஜவில் இணைந்தார்.
* தற்போதைய நிலை: வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது.

சஞ்சய் சேத்
சமாஜ்வாதி கட்சி எம்பியாக இருந்த இவருக்கு சொந்தமான சாலிமர் கார்ப்பரேஷன் அலுவலகங்களில் 2015ல் ஐடி ரெய்டு நடந்தது. பின்னர் எம்எல்சியாக இவரை நியமிக்க உ.பி. கவர்னர் ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் 2016ல் இவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்பி ஆனார். முலாயம் சிங் யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமன இவர், 2019ல் சமாஜ்வாதி – பிஎஸ்பி கூட்டணி உருவாக முக்கியப் பங்காற்றியவர். ஆனால், தற்போதைய மாநிலங்களவை தேர்தலில் சஞ்சய் சேத் பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டார்.
* 2015 ஜூன் : சஞ்சய் சேத் நிறுவனங்களில் ஐடி ரெயடு.
* 2019 ஆகஸ்ட்: சஞ்சய் சேத் பாஜவில் இணைந்தார்.
* 2023 ஜூலை: இவரது நிறுவன அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.
* 2024 பிப்ரவரி: உ.பியில் இருந்து மாநிலங்களவை எம்பியாக இவரை தேர்வு செய்ய பாஜ சார்பில் இவர் நிறுத்தப்பட்டார்.
* தற்போதைய நிலை: விசாரணை நடைபெற்றாலும்; நடவடிக்கை எதுவும் இல்லை.

சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் சுவேந்து அதிகாரி உட்பட 11 திரிணாமுல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட இவர்கள் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஆதாரங்கள் 2014 மற்றும் 2016ல் தேர்தல் சமயத்தில் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
* 2017 ஏப்ரல்: நாரதா லஞ்ச வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
* 2019 ஏப்ரல்: குற்றச்சாட்டின்போது சுவேந்து அதிகாரி எம்பியாக இருந்ததால், இவர் மீது விசாரணை நடத்த சபாநாயகர் அனுமதி கோரப்பட்டது.
* 2020 டிசம்பர்: சுவேந்து அதிகாரி பாஜவில் சேர்ந்தார்.
* தற்போதைய நிலை: விசாரணைக்கு இதுவரை சபாநாயகர் ஒப்புதல் தரவில்லை.

கே.கீதா
ஒய்எஸ்ஆர்சிபி எம்பியான இவர் மற்றும் இவரது கணவர் பி.ராமகோடீஸ்வரராவுக்கு சொந்தமான நிறுவனமான விஸ்வேஸ்வரா இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து ₹42 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இவர்களது பெயர்கள் 2015ம் ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றன. கடந்த மார்ச் 12ல் இந்த வழக்கில் இவர்கள் மீதான தீர்ப்பை தெலங்கானா ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. கடந்த மார்ச் 28ம் ேததி இவர் பாஜ சார்பில் அராக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல், திரிணாமுல் கட்சியை சேர்ந்த சோவன் சாட்டர்ஜி, தபஸ்ராய், தேசியவாத காங்கிரசின் சகஜ் புஜ்பால், காங்கிரசை சேர்ந்த கிரிபா சங்கர் சிங், திகம்பர் காமத், அசோக் சவான், நவீன் ஜிண்டால், அர்ச்சனா பாட்டீல், கீதா கோடா, பாபா சித்திக், ஜோதி மிர்தா , தெலுங்குதேசம் கட்சியின் சுஜானா சவுதாரி உட்பட 25 பேர் மீதும் ஊழல் வழக்கு இருந்தும் விசாரணை அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். இவர்களில் 23 பேரில் 3 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். 20 பேர் மீதான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது தெரிய வந்துள்ளது.

யாமினி அண்ட் யாஷ்வா ஜாதவ்
மகாராஷ்டிரா சிவசேனா எம்எல்ஏ யாமினி மற்றும் அவரது கணவர் யஷ்வந்த் ஆகியோர், அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கினர். அவர்களது ஆறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 2022ம் ஆண்டில், 40க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* பிப்ரவரி 2022 – தம்பதிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
* மே 2022 – ஐடி வழக்கை பதிவு செய்த பிறகு அமலாக்கத்துறை யஷ்வந்த்துக்கு சம்மன் அனுப்பியது
* ஜூன் 2022 – ஏக்நாத் ஷிண்டே அணியில் தம்பதிகள் சேர்ந்தனர்
* தற்போதைய நிலை: வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை

The post ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...