- பழனிசாமி
- பாடம் தங்கி
- யூனியன் பஹாசா
- உதயநிதி பிரசரம்
- வட சென்னை
- பெரம்பூர்
- திமுக இளைஞர் அணி
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- கொளத்தூர்
- வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி
- கலனிதி வீரசாமி
- சென்னை ஐ.சி.எஃப்
- பாட்டம் தங்கி
- உதயநிதி பிரசரம்
பெரம்பூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கொளத்தூரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
சென்னை ஐசிஎப், கொளத்தூரை இணைக்கும் புதிய மேம்பாலம் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கொளத்தூரில் சிறப்பு கண் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. கொளத்தூர் காமராஜ் நகரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில், 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் 6381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் 50 ஆண்டுகள் கோரிக்கையான எண்ணூர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொடுங்கையூர் குப்பை மேட்டை படிப்படியாக சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்துள்ளோம். குறிப்பாக, விம்கோ நகர் முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டித்து தரப்படும். வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியில் இருந்து பொதுமக்கள் செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்படும்.
கணேசபுரம் மேம்பால பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னையில் பிரத்யேக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும். சென்னையில் பல பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்ததும் பட்டா பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு வீட்டுமனை உள்ள அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். தேர்தலின்போது மட்டும் தமிழ்நாட்டுக்கு மோடி வந்து செல்கிறார். மற்ற நேரங்களில் வருவது கிடையாது. இதனை பொதுமக்கள் கேள்வி கேட்கவேண்டும்.
திமுக அரசால் கூறிய வாக்குறுதிகள் மட்டுமல்லாது நாங்கள் கூறாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். அதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் தொடர்ந்து நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். இதுதான் திராவிட மாடல்.தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பாஜக அரசிடம் பாதம் தாங்கி பழனிசாமி அடகு வைத்து விட்டார். அவருக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஆர்டி.சேகர், தாயகம் கவி, சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர்.
The post ஒன்றிய பாஜ அரசிடம் தமிழக உரிமைகளை அடகுவைத்த ‘‘பாதம் தாங்கி’’ பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்: வட சென்னையில் உதயநிதி பிரசாரம் appeared first on Dinakaran.