சென்னை: இந்திய மீனவர்களின் பிரச்சனையை மற்றும் சீனா அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுப்பது பாஜகவின் அரசியல் யுத்தி என தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக கழக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் இருந்து ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது : சென்னையின் பிரதான இடங்களில் மழை காலங்களில் மழை நீர் வடிந்தது திமுகவின் போர்க்கள பணிதான். அதுமட்டுமின்றி வெள்ளத்தின் போது தமிழகம் வராத பிரதமர் இப்போது தான் வெயில் காலத்தை அதிகம் நேசிக்கிறார் போல இதுவும் அரசியலுக்காக தான். திமுக பெண்களுக்காக கொடுத்த திட்டத்தின் வரவேற்பாக பிரச்சாரம் அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழகப் பிரச்சனை குறித்து பேசியபோது பாஜக மற்றும் அதிமுகவினர் கண், காது மூடிக்கொண்டு வீட்டில் அமர்ந்திருப்பார்கள் என்ன விமர்சித்தது மட்டுமின்றி நாடாளுமன்ற நிதி 12 அரை கோடி தொகையை பிரதமர் எடுத்துக் கொண்டார். அந்தத் தொகையை போராடி ஒரு வருடத்திற்கான தொகையை வாங்கி உள்ளோம்.
சீனா அருணாச்சல பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டு கொள்ளாமல் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பது பாஜகவின் அரசியல் யுத்தி. குஜராத் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டதை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மீனவர்களின் பிரச்னை, சீனாவின் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுப்பது பாஜகவின் அரசியல் யுத்தி: தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விமர்சனம் appeared first on Dinakaran.