×
Saravana Stores

ஒவ்வொரு பாயின்ட்லையும் பசிக்குதுனு அடம்: கடை கடையாய் ஓடிய நிர்வாகிகள்: ‘ஓசி இளநீர்’ அண்ணாமலை; ‘பிரசாரத்தில் கூட்டமே இல்ல… மதிக்கவே மாட்டீங்கறாங்க…’ என புலம்பல்

தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தான் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதமலை, வடவள்ளி, நவாவூர் பிரிவு, தொண்டாமுத்தூர் ரோடு, சுண்டப்பாளையம், ஓனப்பாளையம், அஜ்ஜனூர், வீரகேரளம், பிஎன்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று தீவிர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பல இடங்களில் அவரை காண பொதுமக்கள் கூட்டம் வரவில்லை. குறிப்பாக ஓணாப்பாளையம், சுண்டபாளையம் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டமே இல்லாத பகுதியில் கையை ஆட்டியபடி சென்றார். ‘‘நாங்கள் ஏற்கனவே ஜெயித்து விட்டோம். பாரத பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி தான் வருவார் என மக்களுக்கு தெரிந்துவிட்டது. பிரதமர் யார் என தெரிந்தே ஓட்டுப்போடுவது இந்த தேர்தலில்தான். எனவே இது வித்தியாசமான தேர்தல். 400க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். என் வண்டி டெல்லி போக நீங்கள்தான் ஓட்டு போட வேண்டும்’’ என அவர் பிரசாரத்தின் போது தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.

ஓணாப்பாளையம் பகுதியில் அவர் ரோட்டோரம் இருந்த இளநீர் கடையில் இளநீர் வாங்கி குடித்தார். தன்னுடன் இருந்த எம்எல்ஏ வானதி சீனிவாசனை விட்டுவிட்டு இவர் மட்டும் தனியாக இளநீர் குடித்துவிட்டு காசு தராமல் பிரசார வேனில் ஏறிவிட்டார். உடன் இருந்த வானதி சீனிவாசன் இளநீர் கேட்டதால் அங்கே இருந்த மாவட்ட பாஜ நிர்வாகி வேகமாக ஓடிச்சென்று இளநீர் வாங்கி கொடுத்தார். அனைவரும் செல்போனில் வீடியோ எடுப்பது அறிந்து அண்ணாமலை இளநீர் கடைக்காரருக்கு காசு தராமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. காசு வருமா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த இளநீர் கடைக்காரருக்கு மாவட்ட பாஜ நிர்வாகி சபரி ரூ.100 கொடுத்தார்.

சிறிது தூரம் சென்றதும் அண்ணாமலை அண்ணன் திராட்சை பழம் கேட்கிறார் என உடன் வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். சுண்ட பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வேனை நிறுத்தி அங்கே திராட்சை வாங்கி அவருக்கு கொடுத்தனர். அங்கே இருந்து சிறிது தூரம் சென்றதும் அண்ணாமலை அண்ணனுக்கு பசிக்கிறது என உடன் இருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது அதே பகுதியில் இருந்த பாஜ நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு சென்று காலை உணவு சாப்பிட்டனர். அங்கே கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு மட்டுமின்றி போலீசாருக்கும் பொங்கல், இட்லி, வடை என உணவு வழங்கப்பட்டது. அண்ணாமலை ஓட்டு கேட்டு சென்ற இடங்களில் பொதுமக்கள் எந்த வரவேற்பும் தரவில்லை. கை கூப்பி ஓட்டு கேட்டபோது கண்டுகொள்ளாமல் பலர் சென்று விட்டனர்.

ஒரு சிலர் வாகனத்தை நிறுத்தி அண்ணாமலையுடன் செல்பி போட்டோ எடுத்தனர். ஓட்டு போடுங்க என அவர் கேட்டபோது, ‘சாரி சார்… நாங்க பேஸ்புக்ல போடறதுக்குதான் போட்டோ எடுத்தோம் என கூறி சென்றனர். என்னங்க இந்த மக்கள் என் பேச்சை கேட்க மாட்டீங்கறாங்க… செல்பி பேஸ்புக்ல மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்…’ என அண்ணாமலை பிரசார வாகனத்தில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். கூட்டம் இல்லாத பகுதியில் அவரும் செல்போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அஜ்ஜனூர், வீரகேரளம், பிஎன்புதூரில் இவர் பிரசாரம் செய்தபோது மக்களை காணவில்லை. எனவே பிரசார ரூட்டை மாற்றி மாற்றி மக்கள் கூட்டம் உள்ள பகுதியை தேடி சென்றார். அப்போதும் மக்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. ‘‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வெச்சு முடிவு செய்யக்கூடாது. மக்கள் அண்ணாமலையை டைம்பாஸ் ஆக வெச்சு செய்றாங்க’’ என கோவை தொகுதி பிரசாரத்தை மக்கள் கிண்டல் செய்தனர்.

* தமிழ் புறக்கணிப்பு கன்னடத்தில் வாக்கு சேகரிப்பு
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை நேற்று மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து அவர் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே செல்லும் இடமெல்லாம் கூட்டம் இல்லாமல் அப்செட்டில் இருந்த அவர் திடீரென கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்தார். கன்னடம் புரியாததால் அவர் என்ன சொல்ல வருகிறார் என தெரியாமல் மக்கள் விழித்தனர். தமிழ்…தமிழ்… என பேசும் அண்ணாமலை தமிழ்நாட்டுக்குள் தமிழில் பேசாமல் கன்னடத்தில் பேசியதை கண்டு முகம் சுழித்த மக்கள் தமிழர்கள் மத்தியில் கன்னடத்தில் பிரசாரமா? என முணுமுணுத்தபடியே சென்றனர். அவர் பிரசாரம் செய்த பகுதி கன்னடர்கள் அதிகளவில் உள்ளதால் அவர் அவ்வாறு பேசியிருக்கலாம் என சிலர் விளக்கம் அளித்தனர். அண்ணாமலை கன்னடத்தில் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘தமிழ் உயிரோடு இருக்க நினைப்பவர்கள் யாரும், பாஜவினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும், வெயில் அதிகமானதால் அண்ணாமலை சூடாகியிருப்பார்’ போன்ற பல்வேறு நெட்டிசனக்ள் கமென்ட் செய்து வருகின்றனர்.

The post ஒவ்வொரு பாயின்ட்லையும் பசிக்குதுனு அடம்: கடை கடையாய் ஓடிய நிர்வாகிகள்: ‘ஓசி இளநீர்’ அண்ணாமலை; ‘பிரசாரத்தில் கூட்டமே இல்ல… மதிக்கவே மாட்டீங்கறாங்க…’ என புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Adam ,OC Younger' Annamalai ,Tamil Nadu ,BJP ,State ,President ,Annamalai ,Marudamalai ,Vadavalli ,Navavur Division ,Thondamuthur Road ,Sundapalayam ,Onapalayam ,Ajjanur ,Veerakeralam ,PNputhur ,Coimbatore ,OC Youth ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...