×

தேர்தல் பிரசார களத்தில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி மூதாட்டிகளின் ஆட்டமும், அழுகையும்

புதுச்சேரி, ஏப். 2: புதுச்சேரியில் நேற்றைய தேர்தல் பிரசார களத்தின்போது 2 மூதாட்டிகளின் செயல்பாடுகள் (ஆட்டமும், அழுகையும்) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசார களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. புதுவை கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நேற்று பிரசாரம் நடைபெற்ற நிலையில் செண்ட மேளம் முழங்க கலைக்குழுவினர் நடனமாடி பிரசார களத்தை குதுகலமாக்கினர். அப்போது காங்கிரஸ் கட்சியின் கொடியை கையில் ஏந்தியபடி செண்ட மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி (Vibe) நடனமாடினர். அவரது ஆட்டத்தை அவ்வழியாக சென்ற பார்வையாளர்கள் வியந்தபடி பார்த்துச் சென்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் புதுச்சேரி தேஜ கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து உப்பளம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வேன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி, ஒருவர் ரங்கசாமியிடம், அய்யா.. ரூ.2,500 பென்ஷன் தொகை பத்தவில்லை, எனக்கு 75 வயது ஆகிறது, எனவே தொகையை உயர்த்தி கொடுங்க.. எனக்கேட்டார். அப்போது சில நிமிடம் பேச்சை நிறுத்திய ரங்கசாமி பிறகு தொடர்ந்தார். கடந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகை ரூ. 5 கூட உயர்த்தி தரப்படவில்லை.

தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தினோம். 26 ஆயிரம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை கொடுத்துள்ளோம் என்றார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த, மூதாட்டி பெற்ற பிள்ளைகள் சோறுபோட மாட்டேங்குது. பென்ஷன் காசை வைத்துதான் சாப்பிடுகிறேன். பெத்த பிள்ளைங்க சோறு போடலை.. நீங்க வந்துதான் தொகையை உயர்த்தினீர்கள். அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறேன் என்றபடி அங்கிருந்து நகர்ந்தார். மேலும் வம்பாகீரப்பாளையம் பகுதியில் மீனவ பெண்கள் ரேசன் கடையை திறக்க வேண்டும், உயர்த்தப்பட்ட உதவித் தொகை கிடைக்கவில்லை என முதல்வரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரங்கசாமி சட்டமன்றத்திற்கு வந்தால் எவ்வளவு தொகை யார், யாருக்கு உயர்த்தி தரப்பட்டது என்ற பட்டியலை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார்.

The post தேர்தல் பிரசார களத்தில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி மூதாட்டிகளின் ஆட்டமும், அழுகையும் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puduvai Kathirgamam ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு