×

வைகுந்தம் இதுதான்

வைகுந்தம் இதுதான்

வைகுந்தத்தில் இருந்து பெருமாள், அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகுதான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந் தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர்
நல்லோர்’’

இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள்.

1. திருவரங்கன்தான் வைகுந்தநாதன். அதனால் வைகுண்டத்தின் பிரதி தேசமாக அரங்கம் இருப்பதால் வைகுண்டத்தை சொல்லிய பிறகு, அரங்கத்தை தனியாகச் சொல்லவில்லை என்று
எடுத்துக் கொள்ளலாம்.

2. திருவரங்கநாதன்தான் திருமலையில் இருக்கிறான். திருப்பதியில் நின்று திருவரங்கத்திற்குச் சென்று சேர்ந்தான் என்பதால், (“இவனும் அவனும் ஒன்று” என்பதால்) திருவரங்கனைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விட்டிருக்கலாம்.

உயிர்ப் பாசுரம் கொடுத்த தலம்

நம்மாழ்வார் பகவானிடம் பற்பல இடங்களில் சரணாகதி செய்கின்றார். ஆனால், திருவேங்கடவன் திருவடிகளில் செய்த சரணாகதியானது உயிரானது. அந்தச் சரணாகதியின் பலனைத்தான் அவர் திருவரங்கத்தில் நம்மாழ்வார் மோட்சமாக அடைகின்றார். வைணவத்தின் மூன்று மந்திரங்களில் “த்வயம்” என்கின்ற மந்திரம் “மந்திர ரத்னம்” என்று வழங்கப்படுவது.

‘‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா,
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’.

“பிராட்டியுடன் கூடிய பெருமானே, உன் திருவடிகளை சரணம் புகுகிறேன், உன்னை விட்டால் எனக்குப் புகல் இல்லை” என்று, சரணாகதியின் முழுப் பொருளையும் இந்தப் பாசுரம் தெரிவிப்பதால், திருவாய்மொழியின் 1102 பாசுரங்களில் ‘‘உயிர் பாசுரம் இது” என்று, இந்தத் திருவேங்கடப் பாசுரத்தைச் சொல்லுவார்கள்.

திருப்பணி செய்த மன்னர்கள்

தொண்டைமான் சக்ரவர்த்தி என்னும் பேரரசன், இந்தக் கோயிலை எடுப்பித்தவன் என்று “வேங்கடாசல மாகாத்மியம்” நூல் கூறும். பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள், யாதவர்கள் முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆயினும் இக்கோயில் மிகவும் பெரிய அளவில் திருப்பணி செய்யப் பெற்றது விஜய நகர மன்னர்கள் காலத்தில்தான். அவர்கள் காலத்தில் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகியது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்க தேவனே ஆனந்த விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்தான். விஜய நகர விஷ்ணு பக்தரான கிருஷ்ண தேவராயனும் அச்சுத தேவராயனும் பல துறைகளில் இந்தக் கோயிலை
வளப்படுத்தி இருக்கிறார்கள்.

நாற்பது மில்லியன் மக்கள்

இந்தியாவின் ஆன்மிகப் பெருமை களில் ஒன்று திருமலை. இது கடல் மட்டத்திலிருந்து 2799 அடி உயரத்தில் சேஷாசலம் மலைத் தொடரின் ஏழாவது சிகரத்தில் அமைந்துள்ளது. உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாகச் சொல்வார்கள். இக்கோயிலின் செல்வாக்கால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல வெங்கடேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ஆயினும் இந்தக் கோயிலை தரிசிக்காமல் செல்வதில்லை. திருமலை அப்பனை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள். ஒவ்வொரு நாளும் நன்கொடைகள் ஏராளமாக சேர்ந்து கொண்டே இருக்கும். வருடாந்திர பிரம்மோற்சம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படும்.

The post வைகுந்தம் இதுதான் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Vaikuntam ,Tirumala ,Ramanuja Nuantandadhi ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...