×

மின் நுகர்வோரிடம் இருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின் நுகர்வோரிடம் ரூ.15,000 வரை கூடுதல் காப்புத் தொகை வசூலிக்கக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க மின்சார வாரியம் துடிக்கிறது.

அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஓராண்டில் பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு, 3 மாதங்களுக்கான தொகை புதிய காப்புத் தொகையாக கணக்கிடப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள காப்புத்தொகைக்கும், புதிய காப்புத்தொகைக்கும் இடையிலான கட்டணத்தை கூடுதல் காப்புத்தொகையாக நுகர்வோர் செலுத்த வேண்டும். 2022ம் ஆண்டு மின்சாரக் கட்டணம் 52% வரை உயர்த்தப்பட்டது. அதனால், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

அதன்படி பார்த்தால் வீடுகளுக்கான மின் இணைப்புக்கு ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் கூடுதல் காப்புத்தொகையை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் செலுத்த முடியாது. எனவே மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மின் நுகர்வோரிடம் இருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Anbumani Ramadoss ,CHENNAI ,B.M.G. ,President ,Lok Sabha elections ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...