அகர்மால்வா: மபி மாநிலம் ராஜ்கார் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரான காங்கிரசின் திக்விஜய் சிங்,சஸ்னெர் என்ற இடத்தில் நேற்று பேசுகையில், ‘எலக்ட்ரானிக் வாக்கு பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா?’ என பொதுமக்களிடம் கேட்டார். அங்கு உள்ள மக்கள் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக கூறினர்.
அதை தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ராஜ்கார் தொகுதியில் 400 பேரை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முயற்சி எடுத்து வருகிறேன். ஒரு தொகுதியில் எலக்ட்ரானிக் இயந்திரங்களில் அதிகபட்சமாக நோட்டா உள்பட 384 வேட்பாளர்களின் பெயர்கள் தான் சேர்க்க முடியும். ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தில் நோட்டா உட்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் இடம்பெறும்.
384 வேட்பாளர்கள் போட்டியிட்டால் 24 வாக்குபதிவு இயந்திரங்கள் இணைக்கப்பட வேண்டும்.400 பேர் போட்டியிட்டால் வாக்குசீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, வாக்குசீட்டு முறையிலான தேர்தலுக்கு நான் தயாராக உள்ளேன்’’ என்றார். இதே போல் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலும் 384 வேட்பாளர்களை தயார் செய்யுமாறு தனது தொகுதியில் பேசியதாக கூறப்படும் செய்தி குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் அளித்துள்ளது.
The post வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த 400 வேட்பாளர்களை நிறுத்த திட்டம்: திக்விஜய் சிங் தகவல் appeared first on Dinakaran.