- குஜராத் டைட்டன்ஸ்
- ஹைதெராபாத்
- அகமதாபாத்
- ஐபிஎல் லீக்
- மோடி அரங்கம்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- கம்மின்ஸ்
- தின மலர்
அகமதாபாத்: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். டிராவிஸ் ஹெட், மயாங்க் அகர்வால் இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் 16 ரன் எடுத்து அஸ்மதுல்லா பந்துவீச்சில் நல்கண்டே வசம் பிடிபட்டார்.
ஹெட் 19 ரன் எடுத்து நூர் அகமது சுழலில் கிளீன் போல்டாக, அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 29 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிளாஸன் 24 ரன் எடுத்து (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ரஷித் கான் சுழலில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். உறுதியான பார்ட்னர்ஷிப் அமையாமல் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், ஐதராபாத் ஸ்கோர் வேகம் எடுக்க முடியாமல் தடுமாறியது.
மார்க்ரம் 17, ஷாபாஸ் அகமது 22 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய அப்துல் சமத் 29 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டாக, ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. பேட் கம்மின்ஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில் மோகித் ஷர்மா 4 ஓவரில் 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
அஸ்மதுல்லா, உமேஷ், ரஷித் கான், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. விரித்திமான் சாஹா, கேப்டன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். சாஹா 25 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷாபாஸ் பந்துவீச்சில் கம்மின்ஸ் வசம் பிடிபட்டார். கில் 36 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மார்கண்டே சுழலில் அப்துல் சமத் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், சாய் சுதர்சன் – டேவிட் மில்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்க்க, குஜராத் வெற்றியை நெருங்கியது. சுதர்சன் 45 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் அபிஷேக் வசம் பிடிபட்டார். குஜராத் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. மில்லர் 44 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), விஜய் ஷங்கர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஷாபாஸ், மார்கண்டே, கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பந்துவீச்சில் அசத்திய மோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். குஜராத் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post ஐதராபாத் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி appeared first on Dinakaran.