×

ஊழல் குடுமி பாஜ கையில் இருப்பதால் பழனிசாமியால் ஒருபோதும் பாஜவை எதிர்க்க முடியாது தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார்: ஈரோடு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: ‘ஊழல் குடுமி பா.ஜ கையில் இருப்பதால் பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜவை விமர்சிக்க, எதிர்க்க முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார்’ என்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியைப் பெருக்கவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழு முயற்சியோடு செயல்பட்டு வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டமாக வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும் – பாஜவும் மக்கள் நலத்திட்டங்களைத் தமிழ்நாட்டுக்கான திட்டங்களைக் குறை சொல்கிறார்கள். அது குறைகளாக இருந்தால் நிச்சயம் சரிசெய்யலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் அவதூறு செய்கிறார்கள். தி.மு.க. திட்டங்களைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு பயனடையும் தமிழ்நாட்டு மக்களையே குறை சொல்கிறார் பாதம்தாங்கி பழனிசாமி.

அவர் மட்டுமா, பா.ஜ.க. என்ன சொல்கிறார்கள்? மகளிருக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையையும் வெள்ள நிவாரணத் தொகையையும் ‘பிச்சை’ என்று கேவலப்படுத்தியும் தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கு நிதி தராமலும் முட்டுக்கட்டை போடும் கட்சி பாஜ. நம்மைப் பொறுத்தவரை, நம்முடைய முழக்கமே என்ன? ‘‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்’’. அந்த கம்பீரத்துடன்தான், இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின், என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறோம்.

ஆனால், அ.தி.மு.க. பா.ஜ.க. பாணி என்ன? ”எதுவும் செய்யவும் மாட்டோம்; யாரு செய்தாலும் தடுப்போம்” இதனால்தான், ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 10 விழுக்காட்டைக்கூட நிறைவேற்றவில்லை என்று ‘பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். உலக அளவில் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல். அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கையில் வந்ததே 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு.

அதைப் பற்றி ஒன்றிய அரசு, வாயே திறக்கவில்லையே. தேர்தல் பத்திரம் போன்றே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் பண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அப்போது மாட்டுவார்கள். யார் யார் கம்பி எண்ணுகிறார்கள் எனப் பார்ப்போம்.
இப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதுவுமே செய்யாத பிரதமர் மோடியும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்த மேற்கு மண்டலத்திற்குத் தாங்கள் ஏதோ சாதனைகளைச் செய்துவிட்டதாக நினைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில், தொழில்வளம் மிகுந்த இந்த மேற்கு மண்டலம்தான், பா.ஜ.க.வின் இன்னல்களுக்கு அதிகமாக ஆளாகியிருக்கிறது. ஜனநாயகம்-நாடாளுமன்றம்-மாநில அரசுகள்-இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒழிக்க நினைக்கும் பா.ஜ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் – தமிழ்நாட்டில் தொழில் துறையையே மொத்தமாக இழுத்து மூடிவிடுவார்கள். தொழில் வர்த்தகக் கட்டமைப்பையே சிதைத்துவிடுவார்கள்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு இடுபொருட்கள் விலை உயர்வு – சுங்கச்சாவடி கட்டணச் சுரண்டல் என்று இந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் – ஜவுளித்தொழில் பேருந்து கூண்டு கட்டும் தொழில் – கொசுவலை உற்பத்தித் தொழில் வரை அனைத்துமே பாதித்திருக்கிறது. மில்களை மூடும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. . ஈரோட்டு மஞ்சள் பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. மஞ்சளை உணவுப் பொருளாக மாற்றிவிட்டால் ஜி.எஸ்.டி போட முடியாது என்று விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது.

இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்தி – கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஊருக்கு உபதேசம் செய்யலாமா? பா.ஜ.க. டைரக்‌ஷன்-இல் நடக்கும் அ.தி.மு.க பா.ஜ.க. கள்ளக்கூட்டணிக்கு, பாதம்தாங்கி பழனிசாமி புதியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார். டயலாக் என்ன தெரியுமா? பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டாராம். என்ன ஒரு பதில். உண்மை அது இல்லை. அவரால் ஒருபோதும் பிரதமர் மோடியையோ அமித்ஷாவையோ ஆளுநரையோ ஏன், பா.ஜ.க.வில் இருக்கும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏன், என்றால் எஜமான விஸ்வாசம்.

பதவி சுகத்திற்காகவும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் பா.ஜவின் அத்தனை மக்கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி. பாதம்தாங்கி பழனிசாமி உங்களால், ஒருபோதும் பா.ஜ.க.வை விமர்சிக்க எதிர்க்க முடியாது. பழனிசாமியின் ஊழல் குடுமி பா.ஜ கையில் இருக்கிறது. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் அமைச்சரை வைத்து, ஆட்சி நடத்தியதும் பழனிசாமிதான். இன்றைக்கும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி வாய்கிழிய ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது. 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, டெல்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார். பிரதமர் மோடி அவர்களே…

நீங்கள் எஜமானர் அல்ல. மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள். அதை மறந்துவிடாதீர்கள். தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள்.

இங்கு தமிழ்நாட்டிலும் – மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பாஜவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

வெற்றிச் சரிதம் எழுத, ஈரோடு மக்கள் திமுக வெற்றி வேட்பாளர் பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், கரூர் தொகுதி மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி்க்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், நாமக்கல் தொகுதி மக்கள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, டெல்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார்.

The post ஊழல் குடுமி பாஜ கையில் இருப்பதால் பழனிசாமியால் ஒருபோதும் பாஜவை எதிர்க்க முடியாது தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார்: ஈரோடு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,BJP ,Kudumi ,Modi ,Chief Minister ,MK Stalin ,Erode ,M.K.Stalin ,Erode district ,Modakurichi ,Kudumi BJP ,Dinakaran ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...