சென்னை, மார்ச் 31: சென்னை விமான நிலைய அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் 9க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்து கொல்லப்பட்டு, தெருக்களில் வீசப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள், புகைப்பட ஆதாரங்களுடன் பீட்டா அமைப்புக்கு புகார் தெரிவித்தனர். இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 9க்கும் மேற்பட்ட நாய்களை, சிலர் கொடூரமாக கொன்று, வீதிகளில் வீசிதாக சென்னையில் உள்ள பீட்டா அமைப்புக்கு, புகைப்பட ஆதாரங்களுடன் இணையதளம் மூலம் புகார் வந்தது.
இதையடுத்து பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து, மீனம்பாக்கம் போலீசார், இது சம்பந்தமாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், புகார் அளித்துள்ள பீட்டா அமைப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குரோம்பேட்டை எம்ஐடியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவன் ஒருவர் இதுகுறித்த புகைப்படங்களுடன் இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த அடிப்படையில்தான் புகார் அளித்ததாக கூறினர்.
மீனம்பாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது, 9க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், ஒரே நாளில் ஒரே நேரத்தில் அடித்துக் கொல்லப்பட்டவைகள் அல்ல. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கொல்லப்பட்டு தெருக்களில் வீசப்பட்டுள்ளன. அதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் ரகு என்பவர், தெரு நாய்கள் கொல்லப்பட்டு தெருக்களில் வீசப்பட்டு கிடப்பதை போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். இணையதளத்தில் வந்த அந்த பதிவை பார்த்து, குரோம்பேட்டை எம்ஐடியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவன் ஒருவர், அந்த போட்டோக்களுடன் பீட்டா அமைப்புக்கு புகார் அனுப்பியுள்ளார். இதையடுத்து பீட்டா அமைப்பு மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளது தெரிய வந்தது.
மேலும் கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் எங்காவது புதைக்கப்பட்டுள்ளனவா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வாறு புதைக்கப்பட்டிருந்தால் அவற்றை தோண்டி எடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின்பு தான், நாய் எவ்வாறு கொல்லப்பட்டது என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்து சில நாட்களுக்கு மேலாகி விட்டதால், நாய்களின் உடல்களை தேடி கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள விமான நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் ஒன்பதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொடூரமாக கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை விமான நிலைய அலுவலர்கள் குடியிருப்பில் நாய்கள் கொன்று குவிப்பு: புகைப்படங்களுடன் பீட்டா அமைப்பில் புகார் appeared first on Dinakaran.