- திமுக
- பாஜக
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- இளைஞர் செயலாளர்
- உதயநிதி ஸ்டாலின்
- காஞ்சிபுரம்
- செல்வா
- அண்ணா
- மதுராந்தகம்
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
- தின மலர்
சென்னை: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, நேற்று காலை மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது: மதுராந்தகம் ஏரி ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. செய்யூர், மதுராந்தகம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும். பாரத பிரதமர் கொரோனா காலங்களில் தமிழக மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மருந்து இல்லை என கூறிவிட்டார். தமிழகத்தில் மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட நரேந்திர மோடி வரவில்லை. தேர்தல் வந்ததால் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறார். கடந்த பத்தாண்டு காலமாக பாஜவும் அதிமுகவும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தனர்.
அதிமுகவால்தான் பாஜ தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. கடந்த 10 வருட பாஜ ஆட்சிக் காலத்தில் அனுபவித்த ஒரே நபர் நரேந்திர மோடியின் நண்பர் அதானி குடும்பம் மட்டும்தான். பிரதமர் மோடி திமுகவினர் தோல்வி பயத்தின் காரணமாக தூங்கவில்லை என கூறி வருகிறார். ஆமாம், திமுகவினர் பாசிச பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வத்தை வெற்றி பெறச் செய்தீர்கள். தற்போது எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டார். அதற்கு, 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று மக்கள் ஆரவாரத்துடன் பதில் அளித்தனர். மேலும் பெண் ஒருவர் மோச்சேரி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென கேட்டார்.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் கண்டிப்பாக, நீங்கள் கேட்ட பகுதிக்கு மேம்பாலம் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் விழுப்புரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி. ஏப்ரல் 19ம் தேதி நீங்கள்போடும் ஓட்டுதான் மோடிக்கு வைக்கும் வேட்டு. அவரை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும். கடந்த மக்களவை தேர்தலில் எதிர் அணியினர் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். தற்போது பல அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் கடந்த தேர்தலில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். இந்த தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை பெற்றிபெற வைத்து எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’ என்றார்.
The post பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.