×
Saravana Stores

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை

ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 37 ஆக உள்ளதால், 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.

ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலனையானது நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது 3 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கு.சிவானந்தம், ஈரோடு மாவட்டம், பவானி, லட்சுமி நகரைச் சேர்ந்த ச.சுமதி ஆகிய 2 பேர் தாங்கள் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து, தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று மாலை வரை வேட்பாளர்கள் வாபஸ் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கையானது 37ஆக உள்ளதால், ஈரோடு தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (பேலட் மெஷின்) 16 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா என மொத்தம் 17 பெயர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நேற்றைய நிலவரப்படி ஈரோடு தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு வேட்பாளர்களின் சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், உறுதியான முடிவு இன்று மாலை தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Parliamentary ,Constituency ,Dinakaran ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்