×

ஸ்பெக்ட்ரத்தை ஏல முறை இல்லாமல் தாரை வார்த்து பாஜ தேர்தல் நிதி பெற்றுள்ளது

*திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் : நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசியதாவது:

ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதாக சொன்னார்கள். அன்றைக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என எல்லாரையும் நம்ப வைத்தார்கள். இன்றைக்கு என்ன தெரியுமா அதே ஸ்பெக்ட்ரத்தை ஏல முறை இல்லாமல் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள். அந்த கம்பெனிகள் எல்லாம் பாஜக்கு ரூ.400 கோடி, ரூ.500 கோடி என நிதி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதல்வர்களை மோடி அரசு மிரட்டுகிறது. மம்தா பானர்ஜி, பட்நாயக் எல்லாம் இருக்கிறார்கள். இதை தட்டி கேட்டால் உடனடியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வந்து விடும் என்ற அச்சம் உள்ளது. இதையெல்லாம் வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொல்லும் ஆற்றல் மற்றும் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை காக்கும் பொறுப்பு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பினை நமது தலைவர் ஏற்றுள்ளார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாநில விவசாய அணி இணை செயலாளர் தர்மலிங்கம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அமுதரசன், மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், காங்கிரஸ் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மிசா தங்கவேல், ஆதித்தமிழர் பேரவை பொன்னுசாமி, பல்சமய நல்லுறவு இயக்கம் ஆசிப், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஸ்பெக்ட்ரத்தை ஏல முறை இல்லாமல் தாரை வார்த்து பாஜ தேர்தல் நிதி பெற்றுள்ளது appeared first on Dinakaran.

Tags : BAJA ,SPECTRUM ,Dimuka ,RAZA ,SATYAMANGALAM ,INDIA ,BHAVANISAGAR ,NEILAGIRI ,Dinakaran ,
× RELATED முகமது நபிகள் பற்றி அவதூறு பாஜ நிர்வாகி கைது