- ராஜஸ்தான்
- தில்லி
- பாரக்
- ஜெய்ப்பூர்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- ஐபிஎல் லீக்
- தில்லி தலைநகரம்
- சவாய் மான்சிங் ஸ்டேடியம்
- ரிஷாப் பந்த்
- தின மலர்
ஜெய்பூர்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பன்ட், முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜெய்ஸ்வால் 5 ரன் மட்டுமே எடுத்து முகேஷ் குமார் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரியுடன் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 11 ரன்னில் வெளியேற, ராஜஸ்தான் 7.2 ஓவரில் 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ரியான் பராக் ஆர்.அஷ்வின் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தனர். அஷ்வின் 29 ரன் (19 பந்து, 3 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் ஸ்டப்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து பராக் துருவ் ஜுரெல் ஜோடி அதிரடியாக 52 ரன் சேர்க்க, ராஜஸ்தான் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. பராக் 34 பந்தில் அரை சதம் அடித்தார்.
ஜுரெல் 20 ரன் எடுத்து அன்ரிச் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் பராக் – ஹெட்மயர் ஜோடி பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட, ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. கடைசி 39 பந்தில் அந்த அணிக்கு 95 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பராக் 84 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), ஹெட்மயர் 14 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி பந்துவீச்சில் கலீல் அகமது, முகேஷ் குமார், அன்ரிச் நோர்க்கியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. வார்னர், மார்ஷ் இணைந்து துரத்தலை தொடங்கினர். மார்ஷ் 23 ரன் (12 பந்து, 5 பவுண்டரி) விளாசி பர்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த ரிக்கி புயி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
வார்னர் 49 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பன்ட் 28 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ராஜஸ்தான் கை ஓங்கியது. போரெல் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஸ்டப்ஸ் அக்சர் இணைந்து போராட, ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் வீசிய கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்ட நிலையில், டெல்லி இணையால் 4 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஸ்டப்ஸ் 44 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூருவில் இன்று நடக்கும் 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
The post 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்: 84* ரன் விளாசினார் பராக் appeared first on Dinakaran.