×
Saravana Stores

பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி

பெரம்பூர்: தமிழகத்தில் சில ஜாதி கட்சிகளுடன் பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இதில், பாஜ உடன் கூட்டணி அமைத்ததை பாமக கட்சியில் உள்ள தொண்டர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜவினர் கூட்டணி கட்சியினரை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு இடங்களில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மேலும் பாஜவை சேர்ந்த சிலர் பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமாரை எதிர்த்து பாஜவின் மூத்த நிர்வாகி ஒருவர் வேட்புமனு செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலைமை இப்படி இருக்க மத்திய சென்னையில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை எனவும், பிரசாரத்திற்கு யாரையும் முறையாக அழைப்பதில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

நேற்று எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், கே.பி.பார்க், மோதிலால் நேரு தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜவைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் பெண்களுக்கு பணம் கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும், காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை இருக்க வேண்டும் என்றும் பேசி வைத்திருந்தனர்.

அதன்படி வேட்பாளர் வந்தவுடன் திறந்த ஜீப்பில் ஏறிக்கொண்டார். அவர் செல்லும் வழியெங்கும் பின் தொடர்ந்து சென்ற பெண்கள் பாஜ கட்சி கொடிகளை ஏந்திச் சென்றனர். இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் டிடிவி தினகரனின் அமமுக கொடி இருந்தது. மற்றபடி வேறு எந்த கட்சி கொடிகளும் இல்லை. குறிப்பாக பாமகவினரின் கட்சிக்கொடி எந்த இடத்திலும் இல்லை. மேலும் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பிரசாரத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத பாமக நிர்வாகி ஒருவர் கூறுகையில், வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எங்களை வேட்பாளர் அழைத்து பேசவில்லை. ஒரு மரியாதைக்குக்கூட வட்டச் செயலாளர் யார், பகுதிச் செயலாளர் யார் என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மேலும் எங்களது பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்றால் கடைசி நேரத்தில் மட்டுமே ஒரு கடமைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். முன்கூட்டி எந்த ஒரு தகவல்களையும் தெரிவிப்பதில்லை.

தேர்தல் பணிமனை திறப்பு, வாக்கு சேகரிப்பு போன்ற அனைத்திலும் கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். பாஜவினர் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கூட்டணி கட்சியினரை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். இதனால் பெரிய அளவில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

ஏற்கனவே புளியந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வினோஜ் பி.செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வட மாநில நபர்கள் முன்னிலையில் தமிழர்களை இழிவாகப் பேசி அவர் சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அவர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,BJP ,Perambur ,Tamil Nadu ,BMC ,Bamagavinar ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர்...