திருவொற்றியூர்: அரசு வாகனத்தில் அமர்ந்து மின்வாரிய அதிகாரி மது அருந்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு லைன் இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் ஏழுமலை. கடந்த 3 தினங்களுக்கு முன், மின்சாரம் பழுது பார்க்க எடுத்துச் செல்லும் எப்ஓசி அரசு வாகனத்தில் அமர்ந்து ஏழுமலை மது அருந்திக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மின்வாரிய உதவியாளர் குப்புசாமி என்பவர், ஏழுமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, ஒரு உதவியாளர் என்னை கேள்வி கேட்கக் கூடாது என்று கூறி குப்புசாமியை ஏழுமலை மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள், ஏழுமலையிடம் நேற்று அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பணி நேரத்தின் போது அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக ஏழுமலையை சஸ்பெண்ட் செய்தனர்.
The post அரசு வாகனத்தில் மது அருந்திய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் நடவடிக்கை appeared first on Dinakaran.