×

அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 29: அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் விவரங்களை எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,576 அரசுப்பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டன.

அதனுடன் மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதன்படி இதுவரை 2.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இந்தாண்டு முன்கூட்டியே அரசு பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களில் மாணவர் சேர்க்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் விவரங்களை அந்தந்த பகுதி தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்க வேண்டும். எந்த பள்ளியில் குழந்தையை சேர்க்க விருப்பம் தெரிவிக்க விரும்புகிறார்கள் என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். பெரும்பாலும் அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டு 5 லட்சம் பேர் வரை பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,EMIS ,Vellore ,Anganwadis ,Tamil Nadu School Education Department ,Dinakaran ,
× RELATED 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’...