செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மதுபோதையில் இருந்த ரவுடிகள் சிலர் பீர் பாட்டிலால் பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கோகுலாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் மது வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த இரண்டு ரவுடிகள் பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும், ஏற்கனவே மது குடித்துவிட்டு மயங்கிக் கிடந்த ஒரு வாலிபரை சரமாரியாக தாக்கினர். கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளனர். மேலும், பீர் பாட்டலால் பின் தலையில் ஓங்கி அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறிக்கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், பட்டப்பகலில் பொதுமக்கள் மீது ரவுடிகள் சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘டாஸ்மாக் பார்களில் சமீப காலமாக ரவுடிகளின் ரகளை அதிகரித்து வருகிறது. எனவே, டாஸ்மாக் பார்களில் ரகளையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில் பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.