×
Saravana Stores

J.பேபி

நன்றி குங்குமம் தோழி

ஐந்து பிள்ளைகளுடன் வசித்து வரும் J.பேபி (ஊர்வசி) திடீரென காணாமல் போகிறார். அம்மா காணாமல் போய்விட்டார் என்பதை அறிந்து கொள்ளும் மகன்களான செல்வம் (மாறன்), சங்கர் (தினேஷ்) இருவரும் அம்மாவை தேடுகிறார்கள். கொல்கத்தாவில்தான் அம்மா இருக்கிறார் என தகவல் வருகிறது. சண்டை போட்டுக் கொண்டே அம்மாவைத் தேடி கொல்கத்தாவிற்கு செல்கின்றனர் அண்ணனும் தம்பியும். அங்கு அம்மாவை பார்த்தார்களா? அம்மாவை திரும்ப அழைத்து வந்தார்களா? அண்ணன், தம்பிகளுக்குள் என்ன சண்டை என்பதுதான் J.பேபி படத்தின் கதை. இந்தப் படத்தை இயக்கிய சுரேஷ் மாரி அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே படமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் J.பேபி ஒரு தாயின் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

ஐந்து பிள்ளைகளின் அம்மா, ஏரியாவில் ரகளை செய்யும் பெண், மனநிலை மாற்றங்களினாலும் ஒழுங்கின்மையாலும் தவிக்கும் பெண் என பலவிதங்களிலும் அந்த கதாபாத்திரத்தின் வயதிற்கேற்ப முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஊர்வசி. ‘நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல நைனா, என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்’ என்று கண் கலங்கும் காட்சியில் நடிப்பின் ஆளுமையை நிரூபிக்கிறார் ஊர்வசி. இடைவேளை வரை நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியவர் அதற்கு பின் நடிப்புச் சூறாவளியாக கதகளியே ஆடியிருக்கிறார்.

இரண்டாவது பாதி முழுக்க ஊர்வசியே தனது நடிப்பால் நிறைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்த மாறனுக்கு இறுக்கமான மனநிலையை வெளிப்படுத்தும்
ஒரு கணமான பாத்திரம். அதிலும் நுணுக்கமாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கே உரித்தான கவுன்ட்டர் காமெடிகளாலும், சேட்டைகளாலும் சிரிப்பைத் தந்தும் அந்த கணமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அம்மா மீதான பாசம், தான் வாழும் சூழலின் வறுமை நிலை, வாழ்வின் மீதான இயலாமை, குற்றஉணர்வுதான் தினேஷின் கதாபாத்திரம். கொல்கத்தா நகரில் அம்மாவை பார்ப்பதற்காக தவிப்பதும், அண்ணனுடனான சண்டை அவரை விலகாமல் இருக்க இழுத்துப் பிடித்துக்கொண்டு தேடியலைவது என நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாமல் யதார்த்தமாக நடித்து செல்வமாகவே வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய தாயை அடித்துவிட்டதால் ஏற்படும் குற்றவுணர்வில் அவர் அழும் காட்சிகளில் நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

தினேஷின் கதை தேர்வுகள் எல்லாமே தனித்துவமாக உள்ளது. இது தவிர பேபியின் மகள், இளைய மகன் கதாபாத்திரமும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. இப்படத்தின் நிஜ சம்பவத்தில் கொல்கத்தாவில் அம்மாவைத் தேடி வந்த மகன்களுக்கு உதவிய தமிழரை, அதே கேரக்டராகவே நடிக்க வைத்திருப்பது சிறப்பு. கொல்கத்தா ரயில் நிலையத்தில் தொடங்கி, கங்கை நதியின் பிரமாண்டத்தையும், கொல்கத்தா நகரின் நெருக்கடியையும் தனது கேமராவில் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ வின் பின்னணி இசை படத்தின் இன்னொரு பலம். ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய இசை வலு சேர்க்கிறது. மனிதர்களுக்குள் இருக்கும் சின்ன கோபங்களும், விரக்தி மனப்பான்மையும் எவ்வளவு அர்த்தமற்றவை என்பதையும், ஒவ்வொரு உறவும் எவ்வளவு முக்கியம், மனிதர்கள் ஏக்கம் என்ன, நம்முடைய தேவைகளை தாண்டி சக மனிதர்கள் மீது கள்ளங்கபடமற்று காட்டப்படும் அன்புதான் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு என்பதைதான் J.பேபி பேசுகிறது.

தனியொரு பெண்ணாக குழந்தைகளை கவனிப்பது, தனிப்பெண்ணாக இந்த சமூகத்தில் அவளுக்கு இருக்கும் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்தலின் மீதான ஏக்கம், குழந்தைகளின் மீதான பாசத்தின் பிடிப்பு நிலை, வயதாகும் போது அவர்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்கள், விட்டோத்தியான நிலை என பெண்களுடைய அகம் சார்ந்த விஷயங்களையும் படம் பேசுகிறது. பேபியம்மா போன்ற அம்மாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். ஆனால் அவர்களை பிள்ளைகள் மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் சூழலில், அந்த அம்மாக்களின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதை சொல்லி அதை மக்கள் பார்க்கும்விதமாக பிரச்சார தொனியில்லாமல் எடுத்திருக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்கும் நல்லதொரு திரைப்படம் J. பேபி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post J.பேபி appeared first on Dinakaran.

Tags : J. Baby ,Urvashi ,Selvam ,Maran ,Shankar ,Dinesh ,
× RELATED திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகள்,...