நன்றி குங்குமம் ஆன்மிகம்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல திருப்பணி களைச் செய்தபோதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டுமென்பதே அது! அதன் விளைவே, காஞ்சியில் எழுந்த கயிலாயநாதர் திருக்கோயில். காஞ்சி கைலாச நாதர் கோயில் இராஜசிம்மவர்ம பல்லவமன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.
கோயில் கட்டமைப்பு
தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களை ஒத்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாகக் கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம்பெற்றுள்ளது. திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம்பெற்றுள்ளது.
நடுவில் கைலாயம் போன்று இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கருவறை அமைந்திருக்க, சுற்றிலும் அமைந்த 56 தேசங்களாய் இந்த சிற்றாலயங்கள் விளங்குகின்றன. சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த நாற்கரக் கோட்டத்தில் சிவ வடிவங்களும், விஷ்ணு வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. இரு சிற்றாலயங்களுக்கு இடைப்பட்ட வெளியில் தாய்த் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகு அமைப்பு சிறப்பு வாய்ந்தது.
கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தென்முகக் கடவுள், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. கங்காதரர், ஆடல்வல்லான் சிற்பங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. விமான தாங்குதளத்தில் பூதகணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலும் கருவறை விமானத்தைத் தாங்கியபடி அமர்ந்த யானைகள் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு அமைந்துள்ள கொற்றவை, துர்க்கை, மூத்ததேவி, யானைத் திருமகள், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. நின்ற நிலையில் பாய்ந்தவாறு உள்ள யாளித்தூண்கள் வியப்பூட்டுபவை. இக்கோயில் முழுவதும் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பல சிற்பங்களில் காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.
காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள்
தட்சிணாமூர்த்தி, கங்காதரர், கங்காளர், பிட்சாடனர், காலாந்தகமூர்த்தி, திரிபுராந்தகர், கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், துர்க்கை, ஜேஷ்டாதேவி, முருகன், விஷ்ணு, நரசிம்மர், 64 சிவ வடிவங்கள், சப்தமாதர்கள், சோமாஸ்கந்தர், பன்னிரு ஆதித்தியர், ஏகாதச ருத்திரர், மகிஷாசுரமர்த்தினி, பெண்தெய்வங்கள், சிவனின் ஆடல் கோலங்கள், நந்தி, பூதகணங்கள், விநாயகர் போன்ற அதிகளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. நின்றநிலை யாளித்தூண்கள் மிகவும் எழிலானவை. வரிசையாக அரைத்தூண்கள் போன்று அவை நிற்கின்றன.
கருவறையில் 16 பட்டைச் சிவலிங்கம்
மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை கோயில் களிலும் இதுபோன்ற அமைப்பினை நாம் காண்கிறோம். நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி அமைந்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி
தென்னிந்திய கட்டடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக்கூடிய கட்டிடங்களாகக் கற்கோயில்களை அமைத்து தென்னிந்திய கட்டடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இக்கோயில் பொ.ஊ. 700ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது.
இங்கே அமைந்துள்ள பல காலகட்டங் களையும் சேர்ந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் தென்னிந்திய கட்டடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழமை மிக்க கோயிலாகும். இதைக் கல்வெட்டுக்கள் ‘இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. தொடக்கத்தில் இக்கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டடங்களும் உயர்ந்த சுற்று
மதிலால் சூழப்பட்டிருந்தன.
கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில்நுட்பம், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கோயிலாகும். இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட இக்கோயில் சிற்பக் கலையழகு வாய்ந்ததாகும். தான் மட்டுமின்றி தன் மகனையும், தன் மனைவியையும்கூட இந்த கட்டடப்பணியில் இராஜசிம்மன் ஈடுபடுத்தியுள்ளார். பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரப் பேரரசின் காலத்தில், இக்கோயில் மீண்டும் சிறப்புப்பெற்றது.
கட்டட அமைப்பு
காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணரமுடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
விமானம்
இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ‘முன் மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம்
கொண்டுள்ளது.
துணைக்கோயில்கள்
பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்ஹார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
பல்லவர் கால ஓவியங்கள்
பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ‘இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன.
பட்டடக்கல்
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (பொ.ஊ. 740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களை கர்நாடகாவில் உள்ள பட்டடக்கலுக்கு கொண்டு சென்றார். அங்கு விருப்பாட்ஷா கோயிலைக் கட்டினார். அரசி லோகமாதேவியின் தெய்வமான விருப்பாட்ஷாவை அங்கு அமைத்தார். அக்கோயில், கைலாச நாதர் கோயிலுக்கும், அதைக் கட்டிய ராஜசிம்மனுக்கு அவருடைய எதிரி உருவாக்கிய நினைவுச்சின்னமாக இப்போதும் திகழ்கிறது. அக்கோயில் லோகமாதேவிசபுரம் என்றும் விருபார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புகள்
காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பிற்காலத்தில் பட்டடக்கல்லில் கட்டப்பட்ட விருபாக்ஷா ஆலயம், எல்லோராவின் கைலாசநாதர் ஆலயம் மற்றும் சோழர்காலக் கோயில்களுக்கு முன்னோடிக் கோயிலாக கருதப்படுகிறது. வில்லிபுத்தூர் கோபுரம் போன்ற பிரம்மாண்ட கோபுரங்களுக்கெல்லாம் இக்கோயிலின் துவாரசாலை என்ற சிறிய கோபுரமே தொடக்கப்புள்ளியாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய படைப்பு
களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன் இக்கோயிலை பற்றி ‘‘கச்சிப்பேட்டு பெரிய திருகற்றளி” என்று புகழ்ந்து கூறும் கல்வெட்டு கிடைக்கிறது. பழைய பகையை மீட்ட காஞ்சி மீது படையெடுத்து அழிக்க வந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் இக்கோயிலின் அழகைக் கண்டு மனம் மாறி படையெடுப்பை நிறுத்தி கோயிலுக்கு தானங்கள் வழங்கிவிட்டு திரும்பிச் சென்றதாகக் கூறும் கல்வெட்டுகள் உள்ளன. காஞ்சியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கலைஞர்கள் விக்ரமாதித்தனுக்காக பட்டடக்கல்லில் விருபாக்ஷா கோயிலை கட்டியுள்ளனர்.
காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைப் பற்றி தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ஆர். நாகசாமி கூறுகையில்: தென்னிந்தியாவில் கற்களை இணைத்து கட்டப்பெற்ற முதல் ஆலயம் இது. தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த கற்கட்டுமானங்களில் ஒன்று. அதற்கு முந்தைய கோயில்கள் மரத்திலும் பாறைகளைக் குடைந்தும் மட்டுமே உருவாக்கப்பட்டன. இக்கோ யி ல் கட்டுமானம் இப்போதும் பெரிய மாற்றங்களில்லாமல் அப்படியே நீடிக்கிறது. இந்த கோயிலைப் புரிந்துகொண்டால் ஒரு பாரம்பரிய இந்து ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் கிடைத்துவிடும்.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
தொகுப்பு: கே. சுதா கேசவன்
படங்கள்: பாஸ்கர்
The post கஷ்டங்களைப் போக்கும் காஞ்சி கைலாசநாதர் appeared first on Dinakaran.