தேனி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு இடையே அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் இணைந்து கிராமம் கிராமமாக அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். அப்போது; அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் பெண்களை வரிசையில் நிற்க வைத்து தலா ரூ.100 வீதம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா ரூ.100 வீதம் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரச்சாரத்தில் 5 வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் அதிமுகவின் இந்த பிரச்சாரத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துள்ளன. தொடர்ந்து அதிமுகவின் இது போன்று தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
The post தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.