×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்:  பயணிகளுக்கு அபராதம்  சுங்கத்துறையினர் அதிரடி

சென்னை, மார்ச் 28: மலேசியாவிலிருந்து சென்னைக்கு அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட அபூர்வ வகை வெள்ளைக் கிளிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து மீண்டும் திருப்பி அனுப்பினர். கிளிகளை கடத்தி வந்த பயணிகளுக்கு அபராதம் விதித்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது ராஜா (28), ரமீஷ் ராஜா (27) ஆகியோர் பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தனர். சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கூடைகளை திறந்து பார்த்ததில், அதில் 4 அபூர்வ வகை கிளிகள் இருந்தன.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாங்கள் மலேசியாவிலிருந்து இந்த கிளிகளை எங்களுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கிக் கொண்டு வருகிறோம். இது ஆபத்தான பறவை அல்ல, வீட்டில் செல்லமாக வளர்க்கக்கூடிய கிளிகள் தான். இவைகளை இரண்டு ஜோடிகளாக நாங்கள் வாங்கி வந்திருக்கிறோம். இவைகளை இன விருத்தி செய்ய வைத்து, இந்தியாவில் உற்பத்தி செய்வதுதான் எங்கள் நோக்கம். மேலும் திரைப்பட படப்பிடிப்பு, குறிப்பாக சின்ன திரை, யூடியூப் சேனல் போன்றவைகளில் இதை பயன்படுத்துவோம். அதற்கு முன்னதாக இந்த வெள்ளை கிளிகளுக்கு பேசுவதற்கும், பல்வேறு சாகசங்கள் செய்வதற்கும் பயிற்சிகள் கொடுப்போம் என கூறினர்.

தொடர்ந்த, இதுகுறித்து சுங்க அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, அபூர்வ வகை வெளிநாட்டு கிளிகளை ஆய்வு செய்தனர். அதோடு அந்த கிளிகளை கடத்தி வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தினர். இதில் அந்த வெளிநாட்டு கிளிகள் ‘கக்காட்டூஸ்’ என்ற ரகத்தைச் சேர்ந்த அபூர்வ வெள்ளை கிளிகள் என்று தெரிய வந்தது. இவை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும். அதே நேரத்தில் இந்த அபூர்வ வகை வெள்ளை கிளிகளை கொண்டு வருவதற்கு முறையான அனுமதி எதுவும் இவர்கள் பெறவில்லை. இந்த கிளிகளுக்கு நோய் கிருமிகள் எதுவும் இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழும் இல்லை.

இந்நிலையில் இந்த கிளிகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் பரவி, மனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த கிளிகளை மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை கிளிகளை கடத்தி வந்த இரு பயணிகளிடம் அபராதத்துடன் வசூலிக்க வேண்டும் என்று மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறினர். அதன்படி அதிகாரிகள் இந்த 4 அபூர்வ வகை வெள்ளை கிளிகளையும் மலேசியாவுக்கு நேற்று இரவு விமானம் மூலம் திருப்பி அனுப்பினர்.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்:  பயணிகளுக்கு அபராதம்  சுங்கத்துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Malaysia ,CHENNAI ,Kuala Lumpur ,Chennai airport ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...